Advertisment

’சாதி என்பது பெருமை அல்ல; சக மனிதனை தாழ்வாக நினைக்கின்ற ஒரு உளவியல் நோய்’-சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று, 26-08-2019 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘’வேதாரண்யத்தில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் சிலையைப் பட்டப்பகலில் சமூக விரோதிகள் உடைத்து நொறுக்கிய செய்தி பெரும் அதிர்ச்சியினையும், ஆழ்ந்த மனவேதனையையும் அளிக்கிறது. சாதிய வன்மத்தோடு நிகழ்ந்த எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் நடைபெற்ற இச்சம்பவம் வன்மையானக் கண்டனத்திற்குரியது. காவல் நிலையத்தின் மிக அருகே பொதுமக்கள் முன்னிலையிலேயே நடைபெற்ற இந்த சமூகவிரோத குற்றச்செயல் நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி யிருக்கிறது.

Advertisment

s

உடைத்துத் தகர்க்கப்பட்ட அதே இடத்தில் அண்ணலின் சிலையை உடனடியாகத் தமிழக அரசு நிறுவியிருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், இதுவே போதுமான நடவடிக்கையாக கருத முடியாது. காவல்நிலையம் அருகாமையிலேயே நடைபெற்ற இச்சம்பவத்தின்போது சிலையைத் தகர்க்க சமூக விரோதிகள் முற்பட்டபோதே காவல்துறை அதிகாரிகள் விரைந்து தடுத்து அவர்களைக் கைது செய்திருக்க வேண்டும். அதனை ஏன் செய்யாமல் சிலை தகர்க்கும் வரை விட்டார்கள் என்கிற கேள்வி எழுகிற வகையில் காவல்துறையினரின் நடவடிக்கை அமைந்துவிட்டது. இதன்மூலம், காவல்துறை அதிகாரிகள் வன்முறையாளர்களின் இச்செயலுக்கு மறைமுகமாகத் துணைபோயிருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது. ஆகவே, அண்ணலின் சிலை தகர்ப்பு குற்றச் செயல் நடக்கும் போது தங்கள் கடமையை செய்யாமல் அலட்சியம் செய்த காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

Advertisment

அண்ணல் அம்பேத்கரின் தியாக வரலாற்றையும், மாபெரும் பணிகளையும் பொதுச் சமூகத்திற்கும், இளம் தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய அவசியத்தினை இதுபோன்ற குற்றச்செயல்கள் உணர்த்துகின்றன. அவரைக் குறிப்பிட்ட மக்களுக்கான, குறிப்பிட்ட சமூகத்துக்கானத் தலைவராக மட்டும் பார்ப்பது எதன்பொருட்டும் சகித்துக் கொள்ள முடியாத வரலாற்று அறிவீனம். அவர் ஒட்டுமொத்த இந்திய நிலத்து மக்களுக்காக சிந்தித்த, உழைத்த மாபெரும் தலைவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், அவர்களது உரிமைகளுக்காகவும் அவர் எவ்வாறு கடுமையாகப் போராடினாரோ, அதற்குச் சற்றும் குறைவில்லாது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும், அவர்களது உரிமைகளுக்காகவும் போராடியவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அவர் இந்திய நிலத்தின் பொதுமைக்குமான மக்கள் தலைவர். இந்த புரிதலற்ற தன்மையே நடைபெறுகின்ற இதுபோன்ற வன்முறை செயல்களுக்கு முதன்மை காரணமாக அமைகிறது.

நாற்புறமும் சிக்கல்கள் சூழ்ந்து தமிழகமே வளவேட்டைக்கு இரையாகி அழிவின் விளிம்பில் நிற்கிற இவ்வேளையில் நடைபெறுகின்ற இச்செயல் ஒட்டுமொத்தச் சமூகத்தையும் வெட்கித் தலைகுனிய வைக்கிறது. அதே வேதாரண்யத்தைச் சுற்றிலும் மீத்தேனும், ஹைட்ரோ கார்பனும் எடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு அதற்கானப் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிற நிலையில் மண்ணைக் கபளீகரம் செய்யும் அம்முயற்சிகளைத் தகர்க்காது, மண்ணிற்காகப் போராடிய அம்பேத்கரின் சிலையை அற்ப சாதிய வன்மத்திற்காக தகர்ப்பது என்பது நாகரீகமடைந்த சமூகத்தில்தான் நாமெல்லாம் வாழ்கிறோமா என்கிற கேள்வியை எழுப்புகிறது.

அணு உலை, அணுக்கழிவு மையம், நியூட்ரினோ மையம், எட்டுவழிச்சாலை, கெயில் குழாய் பதிப்பு, உயர்மின்னழுத்தக் கோபுரங்களைப் பதித்தல் எனத் தமிழகத்தின் மீது ஒரு நிலவியல் போர் தொடுக்கப்பட்டு இருக்கிற சூழலில் அத்தகையப் பேரழிவுத் திட்டங்களை விரட்டவும், அகற்றவும் எவ்விதப் போராட்டங்களையும் முன்னெடுக்காதவர்கள் சிலையைத் தகர்ப்பதன் மூலம் அப்பகுதியில் சாதியப் பதற்றத்தை உருவாக்கி வன்முறை வெறியாட்டங்களை நிகழ்த்த வாய்ப்பு தேடிவருகிறார்கள்.

தமிழகத்தின் வேலைவாய்ப்புகள் யாவற்றையும் வடமாநிலத்தவர்கள் அபகரித்துத் தமிழர்களின் பொருளியல் வாழ்வைக் கேள்விக்குறியாக்கி வறுமையிலும், ஏழ்மையிலும் நம்மை நிறுத்தியிருக்கிற இவ்வேளையில் தமிழ்த்தேசிய இனமே அடிமைப்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட இனம் என்பதை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்தால்தான் சாதியப் பெருமிதம் சாகடிக்கப்படவேண்டிய ஒரு விபரீத மனநோய் என்பதை அறிய முடியும். ஆகவே, இன அழிப்பையும், உரிமைப் பறிப்பையும் கண்முன்னே கண்டும் ஏதும் செய்ய இயலாத கையறு நிலையில் நிற்கிற நாதியற்ற இவ்வினத்திற்குச் சாதிதான் ஒரு கேடா என்கிற கேள்வியை ஒவ்வொரு தமிழ்ப்பிள்ளையும் நம் மனதில் எழுப்ப வேண்டும். சாதி என்பது பெருமை அல்ல; சக மனிதனை தாழ்வாக நினைக்கின்ற ஒரு உளவியல் நோய் என்பதைப் புரிந்து கொண்டு சாதிய உணர்வுகளை எமது இளம் தலைமுறையினர் சாகடித்துத் தமிழராக நிமிர முன் வரவேண்டும்.

ஆகவே, அண்ணல் அம்பேத்கரின் சிலையைத் தகர்த்து சாதிவெறியாட்டம் போட்ட சமூக விரோதிகளை எவ்விதப் பாரபட்சமுமின்றி உடனடியாகக் கைதுசெய்து, குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வேதாரண்யம் பகுதியில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாவண்ணம் இருக்க தக்கப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். தமிழக அரசு இனிமேலாவது இதுபோன்றக் குற்றச்செயல்கள் நிகழாவண்ணம் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்.’’

seeman
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe