Advertisment

சமூக அநீதி இழைக்கும் 10% பொருளாதார இட ஒதுக்கீட்டினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – சீமான் 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ’’முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியதன் விளைவாக, பாரத ஸ்டேட் வங்கியின் பணிகளுக்கானத் தேர்வில் வெட்டு மதிப்பெண்கள் (CUT-OFF MARKS) முற்படுத்தப்பட்டவர்களுக்கு 28.5 ஆகவும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 61.25 ஆகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு (SC) 61.25 ஆகவும், பழங்குடி மக்களுக்கு (ST) 53.75 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருப்பது பெருத்த அதிர்ச்சியினை அளிக்கிறது.

Advertisment

s

எத்தகைய அநீதி இட ஒதுக்கீட்டில் நிகழ்ந்துவிடக்கூடாதென 10 விழுக்காடு பொருளாதார இட ஒதுக்கீட்டினை வன்மையாக எதிர்த்துப் போராடினோமோ அத்தகைய அநீதி இன்றைக்கு இழைக்கப்பட்டிருக்கிறது. பன்னெடுங்காலமாக கல்வி, வேலைவாய்ப்பு என யாவும் மறுக்கப்பட்டு, தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஆட்பட்டு, சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டு, புறந்தள்ளப்பட்ட பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பழங்குடி மக்கள் தாங்களாக மேலெழுந்து வருவதற்கு அவர்களைத் தூக்கிவிடத்தான் இட ஒதுக்கீடு எனும் சமூக நீதி கொண்டு வரப்பட்டதே ஒழிய, வறுமை, ஏழ்மை நிலையில் இருக்கிற மக்களை பொருளியல் மேம்பாடு அடையச் செய்வதற்காக அல்ல என்கிற அடிப்படைப்புரிதல் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும். சமூக விடுதலைக்காகக் கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீட்டினை வறுமை ஒழிப்புத்திட்டமாக, பொருளியல் மேம்பாட்டுக்கான முன்னெடுப்பாக நிலைநிறுத்த முற்படுவது மிகப்பெரும் மோசடித்தனம். எதற்காக இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதோ அதற்கான நோக்கத்தையே முழுமையாகச் சிதைத்து அழித்து இட ஒதுக்கீட்டினைக் காலிசெய்ய முற்படும் கொடுஞ்செயல். சமூக விடுதலையை விரும்பி, சனநாயகத்தின் பற்றுறுதி கொண்டு நிற்கிற எவராலும் இதனை ஏற்க முடியாது.

ஆண்டாண்டு காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கிற பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பழங்குடி மக்கள் தங்களுக்குரிய இட ஒதுக்கீட்டினைப் பெற்று கல்வியின் மூலமாகவும், வேலைவாய்ப்பின் மூலமாகவும் முன்னேறத் துடிக்கிறபோது அவர்களை மீண்டும் பழைய நிலைக்கே இழுத்துச் செல்லும் சமூக அநீதியே 10 விழுக்காடு பொருளாதார இடஒதுக்கீடும், அதன் விளைவாக வந்திருக்கிற பாரத ஸ்டேட் வங்கியின் தேர்வு முடிவுகளும். ஆகவே, நிகழ்ந்து கொண்டிருக்கிற பேராபத்தினை உணர்ந்து தமிழக அரசு 10 விழுக்காடு இடஒதுக்கீட்டினை வன்மையாக எதிர்க்க வேண்டும் எனவும், மத்திய அரசைத் திரும்பப் பெற வைக்க அரசியல் அழுத்தமும், நிர்பந்தமும் தர வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.’’

seeman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe