/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hand-in_143.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள டி.வி.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் நவீன் குமார்(23). பட்டதாரியான இவர், காவல்துறை வேலையில் சேர்வதற்காக பயிற்சி எடுத்துக்கொண்டு வருகிறார். கபடி வீரரான நவீன்குமார், தனது தாயிடம் பெரம்பலூர் மாவட்டத்தில் நடக்கும் கபடி போட்டியில் கலந்துகொள்ளச் செல்வதாகக் கூறிவிட்டு தனது இல்லத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் கிளம்பியுள்ளார்.
இந்த நிலையில், நவீன் குமார் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்து கொண்டிருந்தபோது, தேவையூர் என்ற இடத்தில் நெடுஞ்சாலை சென்டர் மீடியேட்டரில் அவரது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், நவீன்குமார் தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவர் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்டு சுய நினைவு இழந்து கிடந்துள்ளார்.
அவ்வழியே வாகனத்தில் சென்றவர்கள் தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்குத்தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் விரைந்து சென்று நவீன்குமார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுயநினைவின்றி கிடந்த அந்தப் பெண்ணையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இது குறித்து மங்களமேடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில், நவீன் குமார் இருசக்கர வாகனத்தில் சென்ற அந்தப் பெண் சின்னசேலம் பகுதியில் உள்ள சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தேவன் என்பவரது 19 வயது மகள் என்பதும், அவரும் நவீன் குமாரும் பெரம்பலூரில் இருந்து கள்ளக்குறிச்சி செல்வதற்காக அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விபத்து நடந்துள்ளதும் தெரியவந்தது. மேலும், இவர்கள் இருவரும் காதலர்கள் என்பதும், இருவரும் பெரம்பலூரில் ரகசியமான முறையில் திருமணம் செய்து கொண்டு ஊர் திரும்பியபோது இந்த விபத்து நடந்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)