தமிழக பள்ளி கல்வி துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியத்துறை தலைவருக்கு நோட்டீஸ்

madurai

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் உள்ளிட்ட பணிகளுக்காக கடந்த ஆண்டு செப்டம்பர் 16ல் நடைபெற்ற தேர்வை ரத்து செய்த உத்தரவிற்கும், மறுதேர்விற்கான அறிவிப்பை வெளியிடவும் தடை கோரிய மனு குறித்து தமிழக பள்ளி கல்வி துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியத்துறை தலைவர் ஆகியோர் பிப்ரவரி 22ல் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்த இளமதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில்," தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் விரிவுரையாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஆண்டு ஜூலை 28ல் வெளியானது. அதை தொடர்ந்து, செப்டம்பர் 16ல் தேர்வு நடைபெற்ற நிலையில், விடைக்குறிப்பு வெளியிடப்பட்டு, நவம்பரில் சுயவிபரங்கள் பெறப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.

இந்நிலையில், விடைத்தாள்களில் முறைகேடுகள் செய்யப்பட்டதாக கூறி, அந்த தேர்வை ரத்து செய்வதாகவும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் அந்த பணிகளுக்கான மறு தேர்வு அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,33, 567 பேர் தேர்வெழுதிய நிலையில், 200 பேரின் விடைத்தாள்களிலேயே முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. அதுவும் தேர்வு எழுதியதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்பதும் உறுதியாகியுள்ளது.

ஆகவே, தவறு செய்த 200 பேருக்காக தேர்வெழுதிய அனைவரையும் தண்டிப்பது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் உள்ளிட்ட பணிகளுக்காக செப்டம்பர் 16ல் நடைபெற்ற தேர்வை ரத்து செய்த உத்தரவிற்கும், மறுதேர்விற்கான அறிவிப்பை வெளியிடவும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் தடை விதிக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

இன்று இந்த மனுவினை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி G.R.சுவாமிநாதன் இந்த மனு தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத்துறை தலைவர் ஆகியோர் பிப்ரவரி 22ல் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு மீதான விசாரனையை அன்றைய தேதிக்கு ஒத்தி வைத்தார்.

சி.ஜீவா பாரதி

maduraiSecretary to the Department of Education of Tamilnadu School Notices to the Board of Exams Exam
இதையும் படியுங்கள்
Subscribe