Second robbery in the same store

சமீப காலமாக டாஸ்மாக் கடைகளில் இரவு நேரங்களில் பூட்டை உடைத்தும் பக்கவாட்டு சுவர்களில் துளையிட்டும் உள்ளே புகுந்து மது பாட்டில்களையும் அங்கிருக்கும் பணத்தையும் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. அதன்படி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சாரம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் கொள்ளை நடந்துள்ளது. இந்தக் கடையில் சூப்பர்வைசராக உள்ளவர் கிருஷ்ணமூர்த்தி. இவரும் இவரது உதவியாளரான குமார் என்பவரும் வழக்கம்போல் டாஸ்மாக் கடை சரக்கு விற்பனை பணி முடிந்து மாலை 6 மணி அளவில் கடையைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், நேற்று (22.06.2021) அதிகாலை டாஸ்மாக் கடை ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் பார்த்துவிட்டு ஒலக்கூர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து, தகவல் அறிந்த திண்டிவனம் டி.எஸ்.பி. கணேசன் உள்ளிட்ட போலீசார் சம்பவம் நடந்த டாஸ்மாக் கடைக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளனர். அதோடு கடையின் சூப்பர்வைசர் கிருஷ்ணமூர்த்திக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அவரும் கடைக்கு விரைந்து வந்து அங்கிருந்த மதுபாட்டில்களைக் கணக்கெடுத்தார். அப்போது கடையில் வைக்கப்பட்டிருந்த 55 அட்டை பெட்டிகளில் 2,872 மதுபாட்டில்கள் இருந்துள்ளன.

Advertisment

அவை அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதன் மதிப்பு 4 லட்சம் ரூபாய் என தெரிவித்துள்ளார் கடை விற்பனையாளர். நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் மழை பெய்துள்ளது. அதைப் பயன்படுத்திக்கொண்டு அந்த நேரத்தில் யாரோ சில மர்ம மனிதர்கள் மினி வேனில் வந்து டாஸ்மாக் சரக்கைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை வேறு திசையில் திருப்பி வைத்துவிட்டு டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மினி லாரி வந்ததற்கான தடம் தரையில் பதிவாகியிருந்ததைப் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து தனிப்படை அமைத்து டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்தவர்களைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். ஆறு மாதங்களுக்கு முன்பு இதே கடையின் சுவரை துளையிட்டு மதுபாட்டில்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் கொள்ளையர்கள். இந்தச் சம்பவம் இரண்டாவது முறையாக நடந்துள்ளது. டாஸ்மாக் கடையில் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment