
இரண்டாவது தவணையாக ரூபாய் இரண்டாயிரம் மற்றும் 14 வகையான இலவச மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு இன்று (14.06.2021) துவக்கிவைத்தார்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல் நேரத்தின்போது திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பில், திமுக வெற்றிபெற்றால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கு ரூபாய் 4,000 வழங்கப்படும் என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து வெற்றிபெற்று முதலமைச்சராக பதவியேற்ற பின்மு.க. ஸ்டாலின்முதல் தவணையாக கடந்த மே மாதம் 2,000 ரூபாய் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் தவணையாக ரூபாய்2,000 இம்மாதம் 15ஆம் தேதி வழங்கப்படும் என அறிவித்ததைத்தொடர்ந்து .இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சிவராசு தலைமையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு இரண்டாவது தவணையாக ரூபாய் 2,000 வழங்கும் நிகழ்ச்சியைத் துவக்கிவைத்து அதனுடன் 14 வகையான இலவச மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், சட்டமன்ற உறுப்பினர்கள் லால்குடி சௌந்தரபாண்டியன், துறையூர் ஸ்டாலின் குமார், முசிறி காடுவெட்டி தியாகராஜன், ஸ்ரீரங்கம் பழனியாண்டி, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் அருளரசு, மாவட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சிற்றரசு, மத்திய மாவட்டப் பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர்,''இன்னும் இரண்டொரு நாளில் டெல்லி சென்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்துரயில்வே ஜங்ஷன் மேம்பாலம் தொடர்பாக பேசி உரிய அனுமதியுடன் வருவேன். பணி விரைவில் தொடங்கப்படும்'' என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடை திறப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த நகர்ப்புறத்துறை அமைச்சர் கே.என். நேரு, ''பாண்டிச்சேரியில் ஆளுகிற பிஜேபி அங்கு நடத்துவது குறித்து பேசவில்லை. நீ செஞ்சா சரி, நான் செஞ்சா தப்பா? மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடமா. பிஜேபி ஆளும் மாநிலங்களில் திறந்திருக்கிறார்கள்.எது மக்களுக்கு சரியாக இருக்குமோ அதனைக் கூட்டணிக் கட்சியுடன் இணைந்துதான் செய்ய முடியும். கம்யூனிஸ்ட் கட்சியினரைத் தலைவர் அழைத்துப் பேசினால்எல்லாம் சரியாகிவிடும். நீங்கள் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்'' என நகைச்சுவையாக கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)