/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cswefcd_0_6.jpg)
தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (16/03/2022) வெளியிட்டுள்ளஅறிக்கையில், “அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்களுக்கான மாணவர் சேர்க்கையில், கிராமப்புறங்களிலும், சிரமமான மலைப்பகுதிகளிலும் கடினமான இடங்களிலும், பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு ஒதுக்கீடு இந்த ஆண்டே செய்யலாம் என உச்சநீதிமன்றம் அளித்துள்ள அனுமதி தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு சமூகநீதி வரலாற்றில் கிடைத்துள்ள இரண்டாவது மிகப்பெரிய வெற்றி!
மருத்துவ மாணவர்கள் இழந்த உரிமை, 5 ஆண்டுகளுக்குப் பின்பு இன்று தி.மு.க. ஆட்சியினால் சட்டப் போராட்டத்தினால் கிடைக்கப் பெற்றுள்ளது. கிராமங்களில் உள்ள மக்களுக்கும் மருத்துவர்கள் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் அரசு மருத்துவர்களுக்கு இப்படியொரு படிப்புரிமை வழங்கி 50 விழுக்காடு இடங்களைக் கிராமப் புறங்களில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும் என்று முதன்முதலில் 1999- ல் அரசாணை வெளியிட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
சமூகநீதியில் எப்போதுமே நாட்டிற்கு முன்னோடியாக விளங்கிய அவரது உத்தரவு 2016 வரை தமிழ்நாட்டில் தங்குதடையின்றி கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. கிராமங்கள்தோறும் அரசு மருத்துவர்கள் பணியாற்றி மக்களுக்குத் தரமான சிகிச்சை வழங்கி வந்தார்கள். ஆனால் திடீரென்று 'நீட்' என்ற ஒரு கோடரி மூலம் எம்.பி.பி.எஸ். மருத்துவக் கனவை மத்திய பா.ஜ.க. அரசு எப்படிச் சிதைத்துக் கொண்டிருக்கிறதோ, அதேபோல் இந்த கிராமப்புறத்தில் பணியாற்றும் அரசு மருத்துவர்களின் 50 விழுக்காடு இடஒதுக்கீட்டையும் காவு கொடுத்தது.
அதைக் கண்டும் காணாமல் இருந்தது அப்போது இருந்த அ.தி.மு.க. அரசு. இந்நிலையில்தான் இதுதொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அருண் மிஷ்ரா அவர்கள் தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு, 'மாநிலத்திற்கு ஏற்றவாறு இடஒதுக்கீடு செய்து கொள்ளும் உரிமை மாநில அரசுக்கு உண்டு' என்று கடந்த 31/08/2020 அன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பளித்து, அந்த அடிப்படையில் கிராமப்புற அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட இந்த இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதற்காகவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் சில அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தாக்கல் செய்த வழக்கில் கடந்த ஆண்டில் நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டதன் பேரில், அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் 2021-2022, அதனைச் செயல்படுத்த தடையாணை பிறப்பித்தது.
இந்த ஆண்டு இன்னொரு வழக்கில் உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் தண்டபாணி அரசாணையைச் செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். அதை எதிர்த்துச் சென்ற மேல்முறையீட்டில்தான் இப்போது இந்த ஆண்டு கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் 50 விழுக்காடு ஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடத்த அனுமதி அளித்து நீதியரசர் எல்.என்.நாகேஸ்வரராவ் மற்றும் நீதியரசர் கவாய் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு மற்றும் அரசு மருத்துவ மாணவர்களின் சார்பில், 50 விழுக்காடு இடஒதுக்கீட்டைத் தடுப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது, பொதுச் சுகாதாரமும், மருத்துவமனைகளும் மாநிலப் பட்டியலில் இருக்கிறது, இந்த ஒதுக்கீடு கிராமப் புறங்களில் மருத்துவ சேவைக்கான திட்டம் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்வைத்ததை ஏற்றுக்கொண்டு இந்த அனுமதியை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்றதும், மிகப்பெரிய சட்டப் போராட்டம் நடத்தி- அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படும் மருத்துவக் கல்வி இடங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு அனுமதியளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இப்போது கிராமப்புற மருத்துவ சேவையைப் பெருக்க, அந்தப் பகுதிகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கான 50 விழுக்காடு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்துள்ளது உச்சநீதிமன்றம். சமூகநீதியை மதிக்காத மத்திய பா.ஜ.க. அரசுக்குப் பதிலாகச் சமூகநீதியைப் பாதுகாக்க உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு மகத்தானது. இதே போல் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவைப் பறிக்கும் நீட் தேர்வு போராட்டத்திலும் சமூகநீதி நிச்சயம் வெல்லும். அதற்காகத் தி.மு.க. அரசு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறுதெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)