தமிழகத்தில் காங்கிரஸ் - தி.முக. இடையே தொகுதிப் பங்கீட்டுக்கான ஒப்பந்தம் நிறைவு பெற்றது. இந்நிலையில் அடுத்தக்கட்டமாக புதுச்சேரியில் இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாகப் புதுச்சேரி தி.மு.க.வினர் அக்கட்சியின் தலைமை கழக நிர்வாகிகளை நேற்று (05.03.2026) சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது புதுச்சேரியில் எவ்வளவு இடங்களில் போட்டியிட வேண்டும் என்பது குறித்து  விவாதித்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியில் நிலை குறித்து இன்று (06.03.2026) பேச்சுவார்த்தை நடத்தினர். காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளரான கிரிஷ் சோடங்கர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. மேலும் கூடுதல் பொறுப்பாளரான அஞ்சலியும்  இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் காங்கிரஸ் கட்சித் தலைவர் வைத்தியலிங்கம் எம்.பி., காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் வைத்தியநாதன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisment

அப்போது அவர்கள் காங்கிரஸ் கட்சி புதுச்சேரியில் குறைந்தது 20 தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என்று தங்களது விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 21 தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. அதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 15 இடங்களில் போட்டியிட்டது. எனவே வரும் தேர்தலில் குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு  இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள், திமுகவிற்கு ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.