Skip to main content

சீமான் ட்விட்டர் முடக்கம்; தவறான தகவல் பரப்புபவர்களுக்கு சென்னை காவல்துறை எச்சரிக்கை

 

Seaman Twitter Freeze; Chennai Police warns those spreading false information

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியினர் 20 பேரின் ட்விட்டர் ஐடிக்கள் ஒரே நேரத்தில் முடக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி ஆளும் மாநில அரசுகளையும் மத்திய அரசையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் சீமான். தான் பங்கேற்கும் கூட்டங்கள் குறித்தும், கட்சி சார்ந்த அறிவிப்புகளையும் மத்திய, மாநில அரசுக்கு எதிரான தனது கண்டன அறிக்கைகளையும் ட்விட்டரில் பதிவிடுகிறார். இந்நிலையில் அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது கட்சியினர் 20 பேரின் ஐடிக்களும் முடக்கப்பட்டுள்ளன. 

 

சைபர் க்ரைம் வல்லுநர்கள் இது குறித்து கூறுகையில், ‘ட்விட்டர் கணக்கை முடக்க மத்திய, மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது. மத்திய அரசு குறிப்பிட்ட 10 நிறுவனங்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்துள்ளது. அவர்கள் குறிப்பிட்ட ஐடிக்கள் குறித்து ட்விட்டரிடம் புகார் அளித்தால் புகாரின் மேல் நடவடிக்கை எடுத்து குறிப்பிட்ட கணக்கை முடக்க வேண்டும் என்பது விதி. ஐடியின் உரிமையாளர் ட்விட்டருக்கு தனது தரப்பு நியாயத்தை எடுத்து சொல்லலாம். கோரிக்கையை ஏற்று கணக்கை முடக்கியதில் இருந்து நீக்கவும் முழுமையாக கணக்கை முடக்குவதும் ட்விட்டரின் விதிமுறைகளுக்கு உட்பட்டது’ என்கின்றனர். நாம் தமிழர் கட்சியினரும் தமது தரப்பு நியாயத்தை ட்விட்டருக்கு தெரியப்படுத்தி அவர்களுக்கு ட்விட்டர் பதில் அளிக்கும் பட்சத்தில் கணக்குகள் முடக்கப்பட்டதற்கான காரணம் கண்டறியப்படலாம்.

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்!” எனக் கூறியுள்ளார்.

 

இதனிடையே நாம் தமிழர் கட்சியினரின் ட்விட்டர் கணக்குகள் முடங்க, சென்னை காவல்துறை தான் காரணம் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. இந்நிலையில் சென்னை காவல்துறை அறிவுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “நாம் தமிழர் கட்சி மற்றும் மே 17 இயக்க நிர்வாகிகளின் சமூக ஊடகப் பக்கங்களை முடக்க தங்கள் தரப்பிலிருந்து எந்தவித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை; இவ்விவகாரத்தில் தவறான தகவல்களைப் பரப்புவதை தவிர்த்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, மீறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என எச்சரித்துள்ளது.

 


 

இதை படிக்காம போயிடாதீங்க !