Skip to main content

சாதியத்தின் முகத்தின் மீது தொடுக்கப்பட்ட அசுரத்தாக்குதலென்றே உணர்கிறேன்- அசுரன் திரைப்படத்திற்கு சீமான் பாராட்டு!  

Published on 23/10/2019 | Edited on 23/10/2019

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தை பார்த்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 'அசுரன்' திரைப்படத்தை பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது,

அசுரன் திரைப்படத்தைக் கண்டேன். பிரமிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த அந்த மாபெரும் அனுபவத்திலிருந்து இன்னும் நான் மீளவில்லை என்றே கூற வேண்டும். என் தம்பி இயக்கிய இத்திரைப்படத்தை மனநிறைவோடு நான் கண்டபோது, ‘நீ என் தம்பி’ என்பதில் பெருமிதமும், பெருந்திமிரும் அடைந்தேன்.படத்தின் தொடக்கத்தில் ஒரு நீரோடையில் கால் எடுத்து வைக்கிற சிவசாமியின் கால்களைக் காட்டுகிற அந்த முதல் காட்சியில் இருந்து, ஒரு நிறைவானப் புன்னகையோடு தன் மனைவியையும், மகனையும் பார்த்தவாறே சிவசாமி பிரிகிற அந்த இறுதிக்காட்சி வரை விழி அகலாமல் பார்வையாளர்களைப் பார்க்க வைக்கிற உனது நேர்த்தியான இயக்கமாகட்டும்! ஒளிப்பதிவின் நுட்பமான கோணங்களாகட்டும்! உன் அண்ணன் வியந்துபோய்விட்டேன்.

 

 Seaman applauds for asuran movie!


குறிப்பாக, இத்திரைப்படத்தின் கதாநாயகன் தனுஷின் ஆற்றல்மிக்கப் பங்களிப்பு இத்திரைப்படத்தை யாரும் எட்ட முடியாத உயரத்திற்கு எடுத்துச்சென்றுவிட்டது என்றால், அது மிகையல்ல! இந்த இளம் வயதிலேயே மிகுந்தத் திறமை வாய்ந்த ஆளுமையாக தம்பி தனுஷ் திரைத்துறையில் வளர்ந்துக் கொண்டிருப்பது கண்டு பெருமகிழ்ச்சி கொள்கிறேன். பல நடிகர்கள் தனக்குக் கொடுத்தக் கதாபாத்திரத்தைச் சிறப்பாக நடிப்பதைக் கண்டிருக்கிறேன். ஆனால், தனுஷ் அதற்குப் பன்மடங்கு மேலே சென்று சிவசாமியாகவே உருமாற்றம் அடைந்து வாழ்ந்திருக்கிறார்.

வசன உச்சரிப்பு, நடை, உடை, பாவனைகள், முகத்தில் காட்டக்கூடிய சிறுசிறு உடன் உணர்ச்சிகள் என்று மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இத்திரைப்படத்தில் மகத்தானதொரு கலைச்சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். எந்தக் கதாநாயகனும் நடிக்கத் தயங்கும் அந்த வயதானக் கதாபாத்திரத்தை ஏற்று அதனுள் முழுமையாகப் பொருந்தி, சிவசாமியாகவே கண்ணில் நிற்கிறார் தம்பி தனுஷ். அந்த அடர்த்தியான மீசைக்குள் அந்த கறைப்படிந்தப் பல்லை பொருத்திக்கொண்டு, கோபமானத் தருணங்களில் மீசையை நீவியவாறே கண்விழிப் பிதுங்க ஆவேசமாக அவர் பாய்கின்ற காட்சிகளில், பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டேன்.அமைதியாகக் காட்சியளிக்கும் தனுஷ் வலி தாங்க முடியாமல் பொங்கியெழுந்து திருப்பி அடிக்க வருகிறபோது அரங்கமே அதிர்கிறது. 

 

 Seaman applauds for asuran movie!

 

பன்னெடுங்காலமாக இழைக்கப்பட்ட அநீதிகளை எல்லாம் பொறுத்துக்கொண்ட ஒரு சமூகம், ‘திருப்பி அடிக்க யாராவது வரமாட்டார்களா?’ என்று கண்ணீரோடும், ஏக்கத்தோடும் காத்திருக்கும்போது திருப்பி அடிக்க ஆவேசமாகச் சிவசாமி திரையில் வருகிறபோது வலி நிறைந்த நம் ஆழ்மனது விடை தேடிக்கொள்வது போல அந்தக் கதாபாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. நம் சமகாலத்தில் வாழ்கின்ற மகத்தானக் கலைஞனாக இத்திரைப்படத்தின் மூலம் தன்னை நிரூபித்திருக்கிற தம்பி தனுஷ் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்! நடுநடுவே அவர் நடிக்கிற வணிக ரீதியிலானத் திரைப்படங்களை குறைத்துக்கொண்டு ‘அசுரன்’ போன்று காலம் கடந்து நிற்கக்கூடிய உன்னதத் திரைப்படங்களை தேர்வுசெய்து நடித்து பெரும் புகழடைய வேண்டுமென எனது விருப்பத்தையும், வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன்.

இதுபோன்ற பல உச்சங்களை அவனது வாழ்வில் அடைய வேண்டுமென உள்ளன்போடு வாழ்த்துகிறேன்.பாடல் வரிகளை உயிர் ஆழத்தோடு எழுதிய என் தம்பிகள் யுகபாரதி, ஏகாதேசி, அருண்ராஜா காமராஜ், ஏக்லாத் ஆகியோர் மிகச்சிறப்பான தமிழை வழங்கித் திரைப்படத்தை முழுத்தகுதிபடுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக, ‘எள்ளு வயல் பூக்கலையே’ என்ற பாடலின் வரிகளை சிறப்பாக எழுதிய என் தம்பி யுகபாரதி ஒரு பாடலில் ஒரு வாழ்க்கையையே வடித்துக் காண்பித்து விட்டான். அதைத் தம்பி தனுஷ் தன் குரலில் பாடியது மனதை நெகிழச்செய்கிறது.என் தம்பி வெற்றிமாறனின் கண்களாகவே மாறி ஒளிப்பதிவு செய்திருக்கும் வேல்ராஜின் பங்களிப்பு இத்திரைக்காவியத்தில் அளப்பெரியது.

 

 Seaman applauds for asuran movie!

 

இவ்வாறு ஆகச்சிறந்ததொருப் படைப்பை உருவாக்குவதில் அவரவர் தங்களது முழுத்திறமையையும் வெளிக்காட்டி மிகச்சிறந்த பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.அநீதிகளுக்கு எதிரான சீற்றத்தை இத்திரைப்படத்தின் உரையாடல்கள் எங்கும் காணலாம். காலில் செருப்புப் போட்டு நடக்கக் கூடாது என்று சொல்கிற சாதிய இறுக்கத்தை அதே செருப்பைக் கொண்டு அடித்து, சாதிய ஆதிக்கத்திமிரை வீழ்த்தும் காட்சியில் திரையரங்கே அதிர்கிறது. அடக்கி ஒடுக்கப்பட்டத் தமிழ்ச்சமூகத்தின் எழுச்சி அந்த செருப்படியின் சத்தத்தில் தெறிக்கிறது; ஆண்டாண்டு காலமாக அடக்கியாண்ட சாதியத்தைச் சிதறடித்து முடிக்கிறது. இளம்பெண்ணின் தலையில் செருப்பை வைத்து சாதியவாதிகள் நடக்கச் சொல்கிற காட்சி, அளப்பெரும் ஆத்திரத்தையும், கடும் கோபத்தையும் நம்முள் ஏற்படுத்தி பார்ப்போர் எவரிடமும் சாதியத்தின் கொடுமையை எளிதாகக் கடத்துகிறது. பெண்கள் மாராப்பு சேலை அணியக்கூடாது; ஆண்கள் முட்டிக்குக் கீழே வேட்டியைக் கட்டக்கூடாது; எச்சிலைத் தரையில் துப்பக்கூடாது; செருப்பு அணியக்கூடாது என்று பன்னெடுங்காலமாக நிலவி வந்த சாதியத்தின் கொடுமைகளை எதிர்த்துப் போராடிய நமது முன்னோர்களைத் திரைமொழியில் காட்சிப்படுத்தியிருக்கிற அக்காலப் போராட்டங்களின் ஒரு குறியீடாகவே இப்படத்தைப் பார்க்கிறேன். 

 

 Seaman applauds for asuran movie!

 

சிவசாமி சாதிய ஆதிக்கவாதியை உதைக்கின்ற உதை என்பது நீண்ட நெடுங்காலமாக நம்மை வீழ்த்திப் போட்டிருக்கிற சாதியத்தின் முகத்தின் மீது தொடுக்கப்பட்ட அசுரத்தாக்குதலென்றே உணர்கிறேன்.பஞ்சமி நில மீட்புப் பற்றி இத்திரைப்படம் விரிவாகப் பேசுகிறது. அதுகுறித்த விவாதத்தை வெகுமக்கள் மத்தியில் தொடங்கி வைக்கிறது. ஆதித்தமிழ் குடிகளும் மற்றவர்களைப் போல சரிசமமாக எல்லாவித உரிமைகளையும், வாய்ப்புகளையும் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட வெள்ளையர்கள்கூட நிலங்களை ஒதுக்கி நமது மக்களின் நிலையை மாற்ற எண்ணினார்கள். புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட என சமூகத்தின் ஆழ்தளத்தில் அடக்கி வைக்கப்பட்டிருந்த அத்தனை சமூக மக்களுக்கான இட ஒதுக்கீட்டிற்காகவும் தன் வாழ்நாளெல்லாம் போராடினார். தனது அமைச்சர் பதவியைத் துறந்தார். பஞ்சமி நில மீட்பிற்காகக் குரல்கொடுத்த தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் வழியில் நின்று எங்கள் ஐயா நடராஜன், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் தலைவர் அண்ணன் வினோத் போன்றவர்கள் பல ஆண்டுகளாகப் பஞ்சமி நில மீட்பிற்காக போராடி வருகிறார்கள். 

 

 Seaman applauds for asuran movie!

 

ஆனாலும், இந்த ஆட்சியாளர்கள் அதுகுறித்து எதுவும் பேசுவதில்லை. ஏனெனில், பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருப்பதே இவர்கள்தான். இதையெல்லாம் கண்டுக் கொதிப்படைந்த ஒரு கூட்டம் அதிகாரத்தை நோக்கி வேகவேகமாக விரைந்து வருகிறது. இந்த ஆட்சியும், அதிகாரமும் சாதி மதம் கடந்து தமிழனாக ஒன்று சேர்ந்து இருக்கிற இளைய தலைமுறைப் புரட்சியாளர்களிடம் சிக்கும்போது அதிகாரத்தை காட்டி மிரட்டி, பிடுங்கப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டப் பஞ்சமி நிலங்கள் யாவும் மீட்கப்பட்டு உரிய மக்களிடம் ஒப்படைக்கப்படும். அந்த உறுதியைத்தான் இத்திரைப்படம் நமக்குள் ஏற்படுத்துகிறது.படம் ஒவ்வொருக் காலக்கட்டத்திலும் ஒரு அரசியலைப் பேசுகிறது. குடிசையை எரிக்கும் கீழ்வெண்மணி காலக்கட்டத்தில் அநீதிக்கு எதிராகப் போராடுகிற சிவப்புத் துண்டாகட்டும்! எண்பதுகளில் காலில் விழுகிற சிவசாமியைக் கைப்பிடித்து தூக்குகிற கருப்புச்சட்டை ஆகட்டும்! இறுதிக்காட்சியில், சிவசாமி பேசுகிற தமிழின ஓர்மையை விதைக்கிற தமிழ்த்தேசியக் கேள்வியாகட்டும். அந்தந்தக் காலகட்டத்தின் அரசியல் சிந்தனைக் குறியீட்டு அம்சங்களால் மாபெரும் சமூகப் புரட்சியின் சாட்சியமாக அசுரன் உருவாகி இருக்கிறான்.“காடு இருந்தா புடிங்கிக்கிடுவானுவோ! ரூபா இருந்தா எடுத்துக்கிடுவானுவோ! படிப்பை மட்டும் எடுத்துக்க முடியாது சிதம்பரம்! படிச்சு நீ பெரியாளா வரும்போது அவனுவோ நமக்கு செஞ்சத நீ யாருக்கும் செஞ்சிராத” என்று நிறைவுறும் அந்த இறுதிக்காட்சியின் மூலம் தமிழ்த்தேசிய இன மரபிலேயே இயல்பாகவே வாய்க்கப் பெற்றிருக்கிற அற உணர்ச்சியைத் தம்பி வெற்றிமாறன் உணர்வுபூர்வமாகப் பதிவு செய்து இருக்கிறான். "ஒரே நிலத்தில் வாழ்றோம். ஒரே மொழியைப் பேசுறோம். 

இது ஒன்னு போதாதா நாம ஒன்னா சேர?" எனும் கேள்வியின் மூலம் தமிழ்ச்சமூகத்தின் ஓர்மைக்கு விடை சொல்லும் அந்த உரையாடல் இன்றையக் காலக்கட்டத்தில் தமிழ்ச்சமூகத்திற்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கிற அரசியலை எவ்விதச் சமரசமுமின்றி இப்படம் பேசுகிறது.இத்திரைப்படம் உருவாவதற்கு முன்னாலேயே இக்கதையை என்னிடம் நீ கூறியபோது, நான் அடைந்த பிரமிப்பைவிடத் திரைப்படம் பன்மடங்கு வியப்பையும், திகைப்பையும் என்னுள் ஏற்படுத்தியிருக்கிறது. ஆயிரக்கணக்கானக் கூட்டங்களில் பல மணி நேரம் வியர்வை சிந்தி நான் விதைக்கிறக் கருத்துக்களை ஒரே ஒரு திரைப்படத்தின் மூலமாக நீ நாடெங்கும் கொண்டு சேர்த்திருக்கிறாய் என்பதை இத்திரைப்படத்தின் வாயிலாக அறிந்து பெருமையும், பெருமகிழ்ச்சியும் அடைகிறேன் தம்பி!இப்படிப்பட்டச் சமூக நோக்கம் கொண்டத் திரைப்படத்தைத் துணிச்சலோடு தயாரித்து அதை முறையாக வெளியிட்டு, கடைக்கோடித் தமிழன்வரை கொண்டு சேர்த்திருக்கிற என் ஆருயிர் அண்ணன் கலைப்புலி தாணு அவர்களை ஒரு தமிழ்மகன் என்ற முறையில் தலைவணங்கி அவருக்கு எனது நன்றியைச் செலுத்துகிறேன்! இத்திரைப்படம் மூலம் அண்ணன் தாணு அவர்களைக் கலைப்புலி என்றழைப்பது எத்தகைய சாலப்பொருத்தமானது என்பதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். 

இத்திரைப்படத்தைப் படைக்க தம்பி வெற்றிமாறனுக்கும், தம்பி தனுஷ்க்கும் வாய்ப்பளித்த அண்ணன் தாணு அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!அண்ணன் கலைப்புலி தாணு அவர்களின் நிறுவனத்தைச் சேர்ந்த உறவுகளுக்கும், இத்திரைப்படத்தில் என் தம்பி வெற்றிமாறனோடு இணை இயக்குனராக பணியாற்றிய எனது உயிர் இளவல் ஜெகதீச பாண்டியனுக்கும், அனைத்துத் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது புரட்சி வாழ்த்துக்கள்!உனக்குத் தனிப்பட்ட அளவில் எனது பெருமித உச்சிமுகர்தல்கள் என் தம்பி. வெறும் வாழ்த்துக்கள்; பாராட்டுக்கள் என்ற சொற்களின் மூலமாகப் போற்றிப் புகழ்ந்து இத்திரைப்படத்தின் புகழை சுருக்க விரும்பவில்லை.இது அதற்கும் மேலே தமிழ்ச்சமூகம் எக்காலத்திற்கும் கொண்டாட வேண்டிய மாபெரும் திரைக்காவியம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சீமான்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'Mike symbol for Naam Tamilar Party'-Seeman official announcement

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது. சின்னம் உறுதியாகும் முன்னரே 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி இருந்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (mike) சின்னம் ஒதுக்கப்பட்டதை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், ''மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக செயல்படவில்லை. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி ( MIKE) சின்னத்தில் போட்டியிடும். நாம் தமிழர் எப்படி 7 விழுக்காடு வாக்கை பெற்றது என்பதுதான் எல்லோருக்கும் வியப்பு. இந்த தேர்தலில் என்ன நடக்கும் என ஜூன் 4 ஆம் தேதி பார்ப்போம்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மதிமுக போல விசிகவும் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''மதிமுக, விசிக, பாஜக கூட்டணியில் இல்லை அதனால் சின்னம் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியில் உள்ளதால் அமமுக டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னமும், த.மா.கா. ஜி.கே. வாசனுக்கு சைக்கிள் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம் இல்லை என்று சொல்கிறதே தேர்தல் ஆணையம், திருமாவளவன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரே அவர் கேட்கும் சின்னத்தை கொடுங்களேன். அறம் சார்ந்து நில்லுங்க'' என்று பதிலளித்தார்.

Next Story

நா.த.க. சின்னம் தொடர்பான விவகாரம்; தேர்தல் ஆணையம் அதிரடி!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Election Commission action for NtK party symbols related issue

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே தேர்தல் சின்னம் தொடர்பான குழப்பம் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்டது. அதாவது கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் இந்த தேர்தலில் கர்நாடகாவைச் சேர்ந்த மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இது நாம் தமிழர் கட்சியினரிடயே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து 'சீமானின் சின்னம் என்ன?' என அக்கட்சியினர் போஸ்டர் மூலம் யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் மற்றொரு கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆறு சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெற்றுள்ள தங்களுடைய கருத்தைக் கேட்காமல் மற்றொரு கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது அநீதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வந்தார். தொடர்ந்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அதே சமயம் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் கோரிக்கை கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும் வழக்கு விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் வழங்கப்பட்டது.

Election Commission action for NtK party symbols related issue

இதனையடுத்து நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கபட்ட மைக் சின்னத்திற்கு பதில் வேறு ஒரு சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், தீப்பெட்டி, கப்பல், படகு, பாய் மரப்படகு அல்லது விவசாயம் சார்ந்த சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மைக் சின்னத்திற்கு பதில் வேறு சின்னம் கேட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முன்னதாகவே வெளியிட்டு பிரச்சாரத்தை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.