Skip to main content

சங்கத்திற்கு சீல்; உயர்நீதிமன்றத்தில் விஷால் முறையீடு!

Published on 21/12/2018 | Edited on 21/12/2018

 

 

vishal

 

தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் விஷால் முறையீடு செய்துள்ளார்.மேலும் இதனை அவரச வழக்காக விசாரிக்கவும் வேண்டியுள்ளார்.

 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக விஷால் உள்ளார். இந்த சங்கத்தில் தற்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை விஷாலுக்கு எதிரான அணி, தியாகராயர் நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலவலகத்திற்கு பூட்டு போட்டது. 
 

 

இதையடுத்து அந்த அலுவலகத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைப்பேன் என்று வந்த விஷால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து கைது செய்ய நேரிடும் என்று போலீசார் எச்சரித்தனர். உடனே விஷால் தானே ஏறி போலீஸ் வேனில் அமர்ந்தார். விஷால் மற்றும் அவருடன் வந்தவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 

 

 

சட்ட விரோதமாக கூடியதாகவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும் நடிகர் விஷால் உள்ளிட்ட 8 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதேபோல் சங்க அலுவலகத்துக்கு சட்ட விரோதமாக பூட்டு போட்டதாக எதிர்தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள்.

 

 

அத்துடன் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 145-ன் கீழ் இரு தரப்பினரும் சங்க அலுவலகத்திற்குள் நுழைய தடை விதித்த போலீசார், ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைத்து இருக்கிறார்கள்.மேலும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
 

 

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் விஷால் மீது ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 145வது சட்டப்பிரிவின் கீழ் விஷால், அவரது தரப்பைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில்  தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் விஷால் முறையீடு செய்துள்ள நிலையில், எங்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் விஷால் தரப்பு வழக்கறிஞர் முறையிட்டுள்ளார். இந்த வழக்கை அவரச வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் முறையிடப்பட்டுள்ளது. இந்த புகாரை மனுவாக கொடுக்கும் பட்சத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.  

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு வரமாட்டேன் என்று பின்வாங்குபவன் நான் இல்லை” - விஷால்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
 Vishal says I am not one to say that I will come to politics and then back off

மார்க் ஆண்டனி பட வெற்றியைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்துள்ளார் விஷால். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர், கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே தனது அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் விஷால். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இந்த சூழலில் தற்போது புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து விஷால், “இனி வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்கமாட்டேன்” என அறிக்கை வெளியிட்டிருந்தார். .

இந்த நிலையில், விஷால் இன்று (09-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு வரமாட்டேன் என்று பின்வாங்குபவன் இல்லை. சினிமா போன்று அரசியல் கிடையாது. அரசியல் என்பது சமூக சேவை. அது துறை கிடையாது. அரசியலை பொழுதுபோக்காக பார்க்காமல் மக்களுக்கு செய்யும் சேவையாக பார்க்க வேண்டும். எல்லாரும் அரசியல்வாதிகள் தான். 2026 ஆம் ஆண்டில் தேர்தல் வருகிறது. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் சேவை செய்வதற்கு இத்தனை கட்சிகள் தேவையில்லை. தற்போது அதிக கட்சிகள் உள்ளன. நல்லது செய்ய முடியும் என்றால் மட்டுமே அரசியலுக்கு வருவேன்” என்று கூறினார். 

Next Story

மீடியாக்களுக்கு கண்டனம் தெரிவித்து கோரிக்கை வைத்த பாரதிராஜா!

Published on 22/09/2023 | Edited on 22/09/2023

 

Bharathiraja who condemned the media and made a request!

 

தமிழ் சினிமாவிலும், சின்னத்திரையிலும் குணச்சித்திர நடிகராக திகழ்ந்தவர் மாரிமுத்து. சமீபத்தில் மாரடைப்பால் காலமானார். தமிழ்சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. அவரது மகள் இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். 

 

இருவரது இறுதிச்சடங்கிலும் செய்தி மற்றும் யூடியூப் சேனல்கள் குவிந்திருந்து செய்திகளை தந்த வண்ணம் இருந்தது. ஆனால் சில சேனல்கள் அநாகரிகமாகவும் நடந்து கொண்டனர். இறந்தவர்களைப் பற்றி நீங்கள் எதாவது சொல்லுங்களேன் என்று சோகத்தில் இருப்பவர்கள் முன் மைக்கை நீட்டி அவர்களது பேட்டிகளை கேட்டு தொல்லை தந்தனர். 

 

ஊடகங்களின் வரம்பு மீறிய இந்த செயலைக் கண்டித்தும், கோரிக்கை ஒன்றையும் தமிழ்த்திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”மரணம் கொடுமையானது. அதிலும் அகால மரணங்கள் மிகக் கொடுமையானது. அப்படியொரு நிகழ்வை சந்திக்கும்போது சொந்த பந்தங்கள், உடன் நட்புகள் கலங்கிப்போகும். செய்வதறியாது திகைத்துப் போகும். அந்நேரம் ஆறுதல் சொல்லுதலே இயலாத காரியம். தேற்றுவதற்கு வார்த்தைகள் இருக்காது”

 

“உடன் நிற்பது மட்டுமே சாத்தியமாகும். அந்நேரத்தைக் கூட நம்மால் தர முடியாத நிலைக்குத் தள்ளிவிடுகின்றன சமீபகால மீடியாக்களின் செயல். புகழ்பெற்றவர்களின் வீட்டு இழப்பை இவர்கள் படம் எடுத்துப் போடுவதால் தேவையற்ற கூட்டம் சேர்கிறது. வந்து உடன் நிற்க நினைக்கும் பலரை துக்க வீட்டிற்கே வரவிடாமல் செய்துவிடுகிறது. அல்லது வந்ததும் ஓட வைத்துவிடுகிறது. முன்பெல்லாம் ஊடக தர்மம் இருந்தது. எந்நிகழ்வை படமாக்க வேண்டும். கூடாதென்று”

 

“இப்போது சமூக வலைத்தளங்கள் பெருகிய பின் எல்லாமே மாறிவிட்டது. அறநிலை பிறழ்ந்துவிட்டது. ஊடகங்கள் மரண வீட்டின் உள்ளே வரை நுழைந்து காட்சித் திருடுவதை செய்கின்றன. நம் அனுமதி இல்லாமல் இரக்கமற்று நம் கையறு நிலையில் நிற்கும் முகங்களை படம் பிடித்துக் காட்டுகின்றனர். இது எந்தவிதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை. சினிமாக்காரர்களின் வீடு என்ன திறந்த மடமா?? அவர்களின் துக்கம் கேலிச் சித்திரமா?. நேற்று... இதற்கு முன் நிகழ்ந்த மரண நிகழ்விலும் மீடியாக்கள் நடந்துகொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. மீடியாக்கள் போர்வையில் வருபவர்களையும் அடையாளங்கண்டு களைய வேண்டிய நேரம் இது".

 

"குடும்ப உறவுகளாக மதிக்கும் மீடியாவினரின் இதுபோன்ற நாகரீகமற்ற செயல்கள் வேறுபடுத்திப் பார்க்க வைக்கின்றன. இவர்களுக்கும் நம் இழப்பிற்கும் சம்பந்தமே இல்லையோ என எண்ண வைக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் மனச் சங்கடத்தை உருவாக்கியுள்ளது. ஊடக தர்மத்தை மீறி நடந்துகொள்வதால்... காணொளி செய்பவர்களை மரண வீட்டில் மறுக்க வேண்டிய விதிமுறைகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கான செயல்பாடுகளைத் தீவிரப்படுத்துவது தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமா சார்ந்த அனைவரின் முக்கிய கடமையாகும். அப்போதுதான் நம் வீட்டு நிகழ்வுகளில் அநாகரீகங்கள் தடுக்கப்படும்.

 

ஒரு மூத்த கலைஞனாகவும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்ற முறையிலும் ஊடகத்தினரின் செயல்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். காவல்துறையும் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் மீடியாக்களை அனுமதிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன்” என்றிருக்கிறார்.