
சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று (09.03.2021) காலை 11 மணிக்கு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு, அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த முடிவால் வரும் தேர்தலில் தேமுதிக தனித்து நிற்குமா? அல்லது வேறு யாருடனேனும் கூட்டணி அமைக்குமா என்பது இன்று தெரியவரும் எனக் கூறப்படுகிறது.
அதனையடுத்து நேற்று கடலூர் பண்ட்ருட்டியில் கட்சிக் கூட்டத்தில் தேமுதிக விஜய பிரபாகரன் பேசுகையில், ''இதுவரை சாணக்கியனாக இருந்தது போதும். இனி தேமுதிக சத்ரியனாக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. எடப்பாடி தொகுதியில் அதிமுக மண்ணைக் கவ்வும். சட்டப்பேரவை தொகுதியில் அதிமுகவுக்குத் தக்க பதிலடி கொடுப்போம். எனக்கு ஆணவம் இல்லை. ஆனால் உங்கள் ஆணவத்தைத்தான் மக்கள் அடக்கப் போகிறார்கள். நிறைய நடந்துள்ளது, சொன்னால் கலவரம் ஆகிவிடும். உங்களைப் போன்று காசுக்கு மாரடிக்கும் கூட்டம் நாங்கள் இல்லை. நாங்கள் கேட்கிற சீட் கிடைக்கவில்லை என்றால் ஒவ்வொரு தொகுதியிலும் சீட் பறிக்கப்படும். அதிமுகவிற்கு இனி இறங்குமுகம்தான். அதிமுக தலைமைதான் சரியில்லை. இதுவரைக்கும் விஜயகாந்தை பாத்துருப்பீங்க, பிரேமலதாவ பாத்துருப்பீங்க. இனி அவங்க ரெண்டு பேரையும் கலந்து விஜயபிரபாகரன பார்ப்பீர்கள்'' என ஆவேசமாக பேசினார்.

இந்நிலையில் தேமுதிக வெளியேறியதற்கு, ‘துளிகள் வெளியேறினால் கடலுக்கு கஷ்டமில்லை’ என அதிமுகவின் நமது அம்மா நாளேடு விமர்சித்துள்ளது. 'துளிகள் வெளியேறினால் கடலுக்கு கஷ்டமில்லை. வெளியேறிய துளிகள் தங்களை புலிகள் என நினைத்து வாய் சவடால் அடிப்பது வருத்தமாக இருக்கிறது. தேமுதிகவிற்கான அங்கீகாரம், முரசு சின்னத்தை பெற்றுக்கொடுத்தது அதிமுகதான்' எனக் கூறியுள்ளது.
“தேமுதிகவின் பலம் கடந்த தேர்தலிலேயே தெரிந்துவிட்டது. பிடிக்கவில்லை என்பதற்காக அதிமுக மீது சேற்றை வாரி இறைக்கக்கூடாது. கீழ்த்தரமான அரசியலை முன்னெடுத்தால் அதிமுக பதிலடி கொடுக்கும்,” என அமைச்சர் ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களைச் சந்திக்கையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.