schools reopening jan 19th cm edappadi palanisamy announced

தமிழகத்தில் ஜனவரி 19- ஆம் தேதி முதல் 10, 12- ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா வைரஸ் நோய் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25/03/2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தமிழக அரசு, இந்த நோய் தொற்றிலிருந்து மக்களைக் காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

Advertisment

மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய் தொற்று பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. தமிழக அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகிறது.28/12/2020 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்தக் கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் 10 மற்றும் 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் 2021 ஜனவரி 6 முதல் 8 வரை கருத்துக் கோரப்பட்டது. இக்கூட்டங்களில் கலந்துக் கொண்ட பெரும்பான்மையான பெற்றோர்கள், பள்ளிகளைத் திறக்க தங்கள் இசைவினை அளித்துள்ளதாக 95 சதவீத பள்ளிகள் அறிக்கை அளித்துள்ளதைக் கருத்தில் கொண்டும், கல்வி பயில்வதில் மாணாக்கர்களின் வருங்கால நலனைக் கருத்தில் கொண்டும்வரும் 19/01/2021 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும்.

பள்ளிகள் திறக்கப்படும் போது, ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படவும், அரசு வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. அவ்வாறு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது. அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களின்நலன்கருதி, அரசு எடுத்துவரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள்மற்றும் மாணவர்கள்முழு ஒத்துழைப்பினை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்"இவ்வாறு முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், ஜனவரி 19- ஆம் தேதி திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.