Advertisment

திறக்கப்பட்ட பள்ளிகள்; மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்த ஆசிரியர்கள்

Schools opened; The teachers took aarti to the students

Advertisment

கோடை விடுமுறை முடிந்து ஈரோட்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்களை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை விடப்பட்டது. இதனை அடுத்து மாணவர்கள் கோடை விடுமுறையை கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊர்களுக்கும் உறவினர்கள் வீடுகளுக்கும் சென்றனர். கோடை விடுமுறை முடிந்தபின் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1ஆம் தேதியும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஜூன் 5-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் முடிந்த பின்னும் தமிழகம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வந்ததால் பள்ளிகள் திறக்கும் தேதியை ஒத்திவைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்படி பள்ளிகள் திறக்கும் நாள் ஜூன் 7-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இருப்பினும் வெயிலின் தாக்கம் குறையாமல் வறுத்தெடுத்து வந்ததால் பள்ளி திறப்பை மீண்டும் தள்ளிப்போட வேண்டும் என பெற்றோர்கள், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து பள்ளிகள் திறக்கும் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. இதன்படி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ஆம் தேதியும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

Advertisment

பள்ளி திறப்பை ஒட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள முக்கியக் கடைவீதிகளில் பெற்றோர்கள் கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக அதிகமாக இருந்தது. நோட்டு, புத்தகம், ஷூ, சாக்ஸ் போன்ற கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. அதேநேரம் பள்ளி திறப்பை ஒட்டி பள்ளிக்கல்வித்துறை சார்பில் அந்தந்த பள்ளிகளில் தூய்மை பணிகள்நடந்து வந்தன. பள்ளி வளாகம், வகுப்பறைகள் தூய்மைப்படுத்தப்பட்டன. பள்ளி திறப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று காலை 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

மாணவர்களை வரவேற்கும் விதமாக ஈரோடு எஸ்.கே.சி ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்று காலை புதிதாக பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் சார்பில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. புதிய மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் சுமதி தலைமையில் ஆசிரியர்கள் பூங்கொத்துகொடுத்து அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்று அவர்களுக்கு இனிப்பு வழங்கினர். இதேபோல் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நுழைவாயிலில் அலங்கார வளைவு அமைத்து சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளிக்கு புதிதாக வந்த மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர். இதேபோல் இன்னும் சில பள்ளிகளில் வாழை தோரணங்கள் கட்டப்பட்டு பள்ளிகளுக்கு புதிதாக வந்த மாணவர்களுக்கு ரோஜாப்பூ மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. மாணவ,மாணவிகள் உற்சாகத்துடன் புதிய நண்பர்கள், புதிய சூழல் என மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர்.

இதேபோல் யுகேஜி மாணவர்களுக்கும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கிட்டத்தட்ட ஒன்றரை மாத விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் சில மாணவ,மாணவிகள் அழுது கொண்டே பள்ளிக்கு வந்தனர். பள்ளிக்குள் நுழைந்ததும் தாய், தந்தையை கட்டி அரவணைத்து பள்ளிக்கு செல்ல மாட்டோம் என்று அழுது அடம் பிடித்தனர். அவர்களை ஆசிரியர்கள் சமாதானப்படுத்தி வகுப்பறைக்குள் அழைத்து சென்றனர்.

ஈரோடு மாவட்ட அரசு பள்ளிகளில் 8,093 மாணவ,மாணவிகளுக்கு இன்று முதல் காலை உணவு வழங்கும் திட்டத்தில் உணவு வழங்கப்பட்டது. அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ,மாணவிகளுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் காலை உணவு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டம் ஈரோடு மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் செயலில் இருந்து வருகிறது. இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்த பிறகு இன்று முதல் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளான இன்று பொங்கல், சாம்பார் வழங்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சியில் 59 பள்ளிகளில் 8,238 மாணவர்களும், தாளவாடி மலைப்பகுதியில் 38 பள்ளிகளில் 665 மாணவர்கள் என 97 பள்ளிகளை சேர்ந்த 8903 மாணவ,மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe