schools fees chennai high court

Advertisment

கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், கட்டணம் வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள் சங்கம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,கடந்த ஆண்டு வசூலிக்கப்பட்ட கட்டணத்தில் 75 சதவீதத்தை வசூலித்து கொள்ளலாம். அதில் 40 சதவீத கட்டணத்தை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மீதத் தொகையை பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு வசூலிக்கலாம் என, கடந்த ஜூலை 17-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், உயர்நீதிமன்ற உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்த 9 தனியார் பள்ளிகளுக்கு எதிராக, தாமாக முன்வந்துநீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்த நீதிமன்றம், புகார் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தாளாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தது.

Advertisment

அதேபோல கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மீதான புகார்களை பெற்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சி.பி.எஸ்.இ. சென்னை மண்டல அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று (14/10/2020) மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சி.பி.எஸ்.இ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 32 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மீது கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்து, சமமந்தப்பட்ட பள்ளிகளின் விவரங்களை சமர்ப்பித்தார்.

சம்பந்தப்பட்ட சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மீது மீதான புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, கூடுதல் கட்டணம் வசூலித்த 9 தனியார் பள்ளிகள், தங்கள் மீதான புகார் குறித்து விளக்கமளிக்கும் வகையில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

அப்போது, தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நீதிமன்ற உத்தரவுப்படி 40 சதவீத கட்டணத்தை கூட இன்னும் பல பெற்றோர்கள் செலுத்தாத சூழல் நிலவுவதாகவும், பள்ளிகள் எந்த நிர்ப்பந்தமும் பெற்றோர்களுக்கு அளிக்கவில்லை என எடுத்துரைத்தனர். ஆனால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்வதாகவும் தெரிவித்தார்.

பள்ளிகள் திறந்த உடன் 30 சதவீத கட்டணத்தை வசூலித்து கொள்ளலாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என இதுவரை எந்த அறிவிப்பும் இல்லாததால், 30 சதவீத கட்டணத்தை வசூலித்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் எனவும், தொடர்ச்சியாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால் பள்ளிகள் ஆசியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட இதர செலவுகளை சமாளிக்க கஷ்டப்பட்டு வருவதாகும் பள்ளிகள் தரப்பில் தெரிவித்தனர்.

அப்போது நீதிபதி, தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என தெரிவிக்குமாறு பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டார். இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லாவிட்டால், ஏற்கனவே 40% வசூலித்த வசூலிக்க அனுமதித்தது போல அடுத்த கட்ட தொகையை வசூலிக்க அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார்.