/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/c3333333_2.jpg)
பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி, சாலை வரி உள்ளிட்ட வரிகளில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் இயங்காததால், கல்வி நிறுவன வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், கல்வி நிறுவன வாகனங்களுக்கான சாலை வரி, மோட்டார் வாகன வரி செலுத்தும்படி அரசு நிர்பந்திப்பதாகக் கூறி, அகில இந்தியத் தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் தமிழக பொதுச் செயலாளர் பழனியப்பன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தனியார் பள்ளி, கல்லூரிகள் இயக்கும் வாகனங்களுக்கான ஓட்டுனர் மற்றும் கிளீனர் உள்ளிட்டோருக்கு ஊரடங்கு காலத்திலும் ஊதியம் வழங்கப்படுகிறது. ஊரடங்கு காரணமாக, வாகனங்களுக்கான மோட்டார் வாகன வரி உள்ளிட்ட வரிகளைச் செலுத்த இயலவில்லை.
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வரி விலக்கு வழங்குவது குறித்து மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசு, கடந்த ஜூன் 9- ஆம் தேதி அறிவுறுத்தியுள்ளது. ஹிமாச்சல பிரதேச அரசு, கல்வி நிறுவன வாகனங்களுக்கு வரி விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. பள்ளி- கல்லூரிகள் திறக்கப்படாததால், வாகனங்களுக்கான கட்டணங்களை வசூலிக்க முடியவில்லை என்பதால், சாலைவரி, மோட்டார் வாகன வரி உள்ளிட்ட வரிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜய் ஆனந்த் ஆஜரானார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)