Schools are open as usual

தமிழகத்தில் கடந்த மே, ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக பரவலாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisment

அந்த வகையில் நேற்று (04.08.2024) மாலை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஈக்காட்டுதாங்கல், மதுரவாயல், ராமாபுரம், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் கனமழை பொழிந்தது. மேலும் பூந்தமல்லி, திருவேற்காடு, வானகரம், செம்பரம்பாக்கம், குன்றத்தூர், மாங்காடு ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பொழிந்தது. அதோடு எம்.ஆர்.சி நகர், மந்தைவெளி, சாந்தோம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், அண்ணா சாலை, முகப்பேர் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய விடியத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

Advertisment

இத்தகைய சூழலில் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று (05.08.2024) வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் அதனையொட்டிய வடமாவட்டங்களில் இன்று காலை காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி ஆலந்தூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம், குன்றத்தூர், பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், திருவொற்றியூர், ஊத்துக்கோட்டை பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (05.08.2024) பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.