
சமீபத்தில் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அமுக்கி விடச் சொன்ன ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலான நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இதேபோல் கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவிகள் சிலர் பள்ளிக்கூடத்தில் சமையல் பாத்திரங்களை கழுவும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள 'இன்னாடு' கிராமத்தில் அரசு மலைவாழ் உண்டு உறைவிட துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் பல்வேறு மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவிகள் உறைவிடப் பள்ளியில் இருந்த சமையல் பாத்திரங்களை கழுவும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெபஸ்டின், சமையலர் ராதிகா ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் இந்த பணியிட நீக்கத்திற்கான உத்தரவை அறிவித்துள்ளார்.