/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/KEERA323.jpg)
சிறுவயதிலேயே தாயை இழந்து தாத்தா, பாட்டி, சித்தப்பாவுடன் வசித்துவந்த பள்ளி மாணவி தூக்கில் சடலமாகத் தொங்கிய சம்பவத்தால் புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவியின் சாவுக்குக் காரணம் என்ன என்று காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தர்மலிங்கம். இவருக்கு திருமணமாகி சில வருடங்களில் மணிமேகலை என்ற மகள் பிறந்தார். அதன்பின் சில வருடங்களில் அவரது மனைவி இறந்துவிட்ட நிலையில், மகளைத் தனது தாய், தந்தை, தம்பியின் பாதுகாப்பில் விட்டுவிட்டு கோயம்புத்தூருக்கு வேலைக்காகச் சென்றுவிட்டார்.
மணிமேகலை தனது சித்தப்பா செந்தில் வீட்டில் தங்கியிருந்து அதே ஊரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இன்று (10/08/2021) மதியம் வீட்டிலிருந்து வெளியே சென்ற சித்தப்பா செந்தில், திரும்ப வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பூஜை அறையில் நூல் கயிற்றில் மணிமேகலை சடலமாகத் தொங்கியதாகக் கூறியுள்ளார்.
அதன்பின்னர், அக்கம் பக்கத்தினர் வந்து மணிமேகலை உடலைக் கீழே இறக்கி, கீரமங்கலம் காவல்துறையினருக்கும் கோவையிலிருந்த மணிமேகலையின் தந்தை தர்மலிங்கத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற ஆலங்குடி டி.எஸ்.பி. வடிவேல் மற்றும் கீரமங்கலம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் உள்ளிட்ட காவல்துறையினர் மாணவி இறப்பிற்கு காரணம் என்ன என்று பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், தடய அறிவியல் சோதனையும் செய்யப்பட்டுள்ளது. உயரமான மேற்தளத்தில் எப்படி மாணவி கயிறு மாட்டினார்? மாணவியைத் தற்கொலைக்குத் தூண்டினார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)