
கள்ளக்குறிச்சி அடுத்த சின்னசேலத்தில் தனியார் பள்ளியில் படித்து வந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி உயிரிழப்பில் மர்மம் நீடிப்பதாக மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த காவல்துறை வாகனம் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த17 வயது சிறுமி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி, அதே பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை அவர் விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார் என்று அவரது பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகத்தில் இருந்து தகவல் தெரிவித்துள்ளனர். மாணவியின் பெற்றோர்களும் உறவினர்களும் பதறி துடித்தபடி பள்ளிக்கு விரைந்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர், பள்ளிக்குச் சென்று மாணவியின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் மாணவி, மூன்றாவது மாடியில் இருந்து தானே கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று கூறுகின்றனர். பெற்றோர் தரப்பில் மாணவி தற்கொலையில் ஈடுபட்டிருக்க மாட்டார் அவரது இறப்பில் சந்தேகம் உள்ளது எனக் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். மாணவியின் உறவினர்கள் பள்ளியின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் அறிந்து பள்ளிக்கு வந்த போலீசார் மாணவியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மாணவியின் மரணம் குறித்து பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் மறியலை கைவிட்டு மாணவியின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் மாணவியின் உயிரிழப்பு தொடர்பாக காவல்துறை உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டுமென அறிவுறுத்திருந்த நிலையில், இன்று காலை மீண்டும் அச்சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமியின் உறவினர்கள், அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு அமைதி வழியில் போராட்டத்தை நடத்தி வந்த நிலையில் திடீரென அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறை வாகனங்கள் மீது கற்களை எடுத்து வீசினர். மாணவியின் உறவினர்கள், மாணவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
அதேபோல் தனியார் பள்ளியின் மீதும் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் சென்னை-சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக தடியடி நடத்தி போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த காவல்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. சிறுமியின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் தரப்பில் உயிரிழந்த சிறுமியின் உடலை மீண்டும் மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து இந்த போராட்டம் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)