Skip to main content

‘படிக்க விடுங்க..’ - கோட்டாட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் விட்ட பள்ளி மாணவி 

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
 schoolgirl complained to the rdo office about a property dispute

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரிக்கு அருகே அமைந்துள்ளது வயலூர் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர், தனது அண்ணனுடன் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து கண்ணீருடன் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதனால் அந்த அலுவலகம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. பள்ளிச் சீருடையுடன் வந்த மாணவி கண்கலங்கி நிற்பதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அனைவரும் மாணவியிடம் நடந்த விஷயங்களைக் கேட்டறிந்தனர்.

பொன்னேரி வயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியின் அண்ணனும் அதே பகுதியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், மாணவி ஆனந்தியின் பெற்றோருக்கும் அவரது அத்தை நளினி உள்ளிட்ட உறவினர்களுக்கும் இடையே சொத்து தகராறு இருந்துள்ளது. இதனால் இருதரப்பினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சொத்துக்களை இருதரப்பினரும் சமமாகப் பிரித்துக்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் நளினி தரப்பு, எதிர்மனுதாரர்களின் சொத்துக்களை அபகரிக்க வேண்டும் எனத் துடித்தனர். 

இத்தகைய சூழலில் கடந்த 10 ஆம் தேதியன்று, நளினி என்பவர் ஆனந்தியின் பெற்றோர் மற்றும் அவரது பாட்டிக்கு எதிராக காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், அந்த புகாரை எடுத்துக்கொண்ட போலீசார், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அதில், ஆனந்தி குடும்பத்தினரை விசாரணைக்காக அழைத்துச் சென்று, அவர்கள் வசிக்கும் வீட்டை காலி செய்து சொத்தை எழுதிக் கொடுக்க வேண்டும் எனக் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, இதற்கு ஒப்புக்கொள்ளாத ஆனந்தி குடும்பத்தினரை லாக்கப்பில் வைத்து பூட்டியதாகச் சொல்லப்படுகிறது.

அந்த நேரத்தில் காவல்துறை இணை ஆணையரின் தலையீட்டால் ஆனந்தி குடும்பத்தினரை வெளியே விட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த விவகாரம் அத்தோடு முடியவில்லை. கடந்த 11 ஆம் தேதி இரவு பள்ளி மாணவி ஆனந்தி மற்றும் அவரது அண்ணன் ஆகியோர் மட்டும் வீட்டில் படித்துக் கொண்டிருந்தனர். அப்போது, காட்டூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், ஆனந்தியின் அத்தை நளினி மற்றும் சில அடியாட்களுடன் அங்கு வந்துள்ளனர். இதையடுத்து, இவர்கள் அனைவரும் சேர்ந்துகொண்டு வீட்டில் இருந்த ஆனந்தியையும் அவரது சகோதரரையும் வீட்டைவிட்டு வெளியே போகச் சொல்லி மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

இத்தகைய சூழலில், ஆளில்லாத சமயத்தில் வீட்டுக்குள் புகுந்து ஆனந்தி குடும்பத்தினரை தாக்க முயற்சித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள், தங்களுடைய வீட்டின் உள்ளேயே இருந்துள்ளனர். ஆனால், அந்த நேரத்தில் வந்த நளினி மற்றும் அவரது அடியாட்கள் வீட்டை வெளியே உடைத்துக்கொண்டு உள்ளே வந்தனர். மேலும், வீட்டுக்குள் இருந்த ஆனந்தி குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியே விரட்ட முயற்சித்தனர். அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைக்கிறது. இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், நளினி உள்ளிட்டோர் முக்கிய பங்கு வகிப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதையடுத்து, கடந்த 14 ஆம் தேதியன்று இவர்கள் மீண்டும் ஆனந்தியின் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அவர்கள், "நீங்க இன்னுமா வீட்டை காலி பண்ணாம இருக்கீங்க? எனக்கூறி ஆனந்தியின் தாயை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அந்த நேரத்தில், வீட்டில் இருந்த ஆனந்தி காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், இதையறிந்தவுடன் ஆனந்தியின் தாயை விடுவித்தனர். இறுதியாக கடந்த 15 ஆம் தேதியன்று உதவி காவல் ஆய்வாளர் உமாபதி மற்றும் ஒரு காவலர் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து மிரட்டியதாகப் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், உறவினர்களின் இத்தகைய செயல்களால் ஆனந்தி குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரையாண்டுத் தேர்வுக்காக படித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் என்றும் பாராமல், சொத்துக்காக கொலை மிரட்டல் விடுப்பதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து, கடும் மன உளைச்சலுக்கு உள்ளான ஆனந்தி மற்றும் அவரது அண்ணன் ஆகியோர் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து கண்ணீருடன் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதால் இந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, உறவினர்கள் இடையே சொத்துக்காக நடக்கும் இந்த மோதல் விவகாரம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்