/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2306.jpg)
கடந்த சில வருடங்களாக தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மராமத்து செய்யப்படாத நீர்நிலைகளைத் தன்னார்வ இளைஞர்கள் ஒன்றிணைந்து சீரமைத்துவருகின்றனர். கைஃபா இளைஞர்கள் மற்றும் கொத்தமங்கலம் இளைஞர்கள் சீரமைத்த ஏரி, குளங்களில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இவற்றிற்காக இளைஞர்கள், பொதுமக்கள், வெளிநாடுவாழ் தமிழர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் உதவிகள் செய்துள்ளனர். 100 நாள் வேலை செய்த மூதாட்டி முதல் பள்ளி சிறுவர்களும் தங்கள் சேமிப்பை நீர்நிலை சீரமைப்பிற்காக வழங்கினார்கள். தற்போது, கீரமங்கலம் பகுதியில் நீர்நிலை சீரமைப்பிற்காக தனது உண்டியல் சேமிப்பை வழங்கிய குருகுலம் பள்ளி மாணவனைப் பாராட்டினர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒருமாதமாக பெய்துவரும் கனமழையால் பல வருடங்களுக்குப் பிறகு ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. ஆனால் ஆலங்குடிக்கு கிழக்குப் பகுதியில் உள்ள கொத்தமங்கலம், குளமங்கலம், கீரமங்கலம், சேந்தன்குடி, நகரம், செரியலூர் உள்பட பல கிராமங்களிலும் உள்ள நீர்நிலைகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன. வரத்து வாரிகள் இல்லாததால் நீர்நிலைகள் தண்ணீர் இல்லாமல் உள்ள நிலையில், கீரமங்கலம் - நகரம் - சேந்தன்குடி ஆகிய கிராமங்களை ஒருங்கிணைக்கும் பெரியாத்தாள் ஏரியில் தண்ணீர் நிரப்பினால் பல கிராமங்களுக்கும் நிலத்தடி நீர் அதிகரிக்கும் என்பதால் கொத்தமங்கலம் அம்புலி ஆறு அணைக்கட்டில் உள்ள பழைய கால்வாயை ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற தன்னார்வ இளைஞர் அமைப்பினர் பொதுமக்களிடம் நிதி பெற்று சீரமைத்துவருகின்றனர். இந்நிலையில் கால்வாய் சீரமைப்பிற்காக கீரமங்கலம் வடக்கு வெற்றிவேல் மகன் கிஷோர், தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த தொகையான ரூ.1,096ஐ இளைஞர் அமைப்பினரிடம் வழங்கினார். பள்ளி மாணவனின் இந்தச் செயலைப் பொதுமக்கள் பாராட்டிவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)