Advertisment

 பிளஸ்2 மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் சஸ்பெண்ட்!

சேலம் அருகே, பிளஸ்2 மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த புகாரின்பேரில், அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Advertisment

சேலம் மாவட்டம் வேம்படிதாளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வேதியியல் பாட ஆசிரியராகவும், பள்ளியின் உதவித்தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வந்தவர் பாலாஜி. இவர் ஒரு மாற்றுத்திறனாளி. கடந்த நான்கு மாதத்திற்கு முன், தன்னிடம் பிளஸ்2 படித்து வந்த மாணவி ஒருவரை, வேதியியல் ஆய்வகத்தில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இவ்வாறு அவர் அந்த மாணவியிடம் சிலமுறை பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு, மாணவியும் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்த நிலையில், அவர் கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து பெற்றோரிடம் சொல்ல பயந்த அந்த மாணவி, தோழிகளிடம் நடந்த விவரங்களைக் கூறியுள்ளார்.

Advertisment

s

அவர்கள் மூலமாக பள்ளியின் மற்ற ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிந்துள்ளது. இதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் அமுதா, இதுகுறித்து கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆய்வாளர் புஷ்பராணி, ஆசிரியர் பாலாஜி மீது சிறுமிகளை வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். ஆனால், ஆசிரியர் பாலாஜி திடீரென்று தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்யும்படி பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

இதற்கிடையே, கோவையில் பதுங்கி இருந்த பாலாஜியை காவல்துறையினர் ஜூலை 6ம் தேதி கைது செய்தனர். பின்னர் சேலம் மாவட்ட முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் பாலாஜி, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுகுறித்து காவல்துறையினர் சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்திக்கும் அறிக்கை அளித்தனர். அதன்பேரில், ஆசிரியர் பாலாஜியை உடனடியாக பணியிடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மாணவியை அழைத்து வந்த காவல்துறையினர் அவருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவப்பரிசோதனை நடத்தினர். அவர், நான்கு மாதம் கர்ப்பிணியாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. பின்னர் மாணவியை, அவருடைய பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் தன்னுடைய மாணவியை கர்ப்பமாக்கிய விவகாரம், சேலம் மாவட்ட ஆசிரியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

school
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe