
கரூர் மாவட்டம், வெண்ணமலை பகுதியில் தனியார் பள்ளியில் படித்துவந்த 12ஆம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நவம்பர் 19ஆம் தேதி அன்று பள்ளிக்குச் சென்று மாலை வீடு திரும்பிய நிலையில், மாணவி தற்கொலை செய்துகொண்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவி தற்கொலை தொடர்பாக வெங்கமேடு காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.
இந்நிலையில், அந்த தனியார் பள்ளியின் கணித ஆசிரியர் சரவணன் என்பவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஆசிரியர் சரவணன் நேற்று (24/11/2021) மதியம் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. எனவே, வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று பள்ளியில் கூறிவிட்டுப் புறப்பட்டுள்ளார். ஆனால், ஆசிரியர் சரவணன் தனது வீட்டிற்குச் செல்லாமல், திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள தனது மாமனார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லாத நிலையில், மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சரவணனின் உடலை மீட்டு துறையூரில் உள்ள அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக, ஆசிரியர் தற்கொலை செய்துகொண்ட இல்லத்தில் காவல்துறையினர் தீவிரமாக சோதனை செய்தனர். அதில், ஆசிரியர் சரவணனின் டைரி ஒன்று சிக்கியது. அந்த டைரியில் அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக இரண்டு, மூன்று பக்கங்களில் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "மாணவர்கள் என்னைத் தவறாக நினைக்கிறார்கள்; நான் எந்தத் தவறும் செய்யவில்லை; ஏன் இப்படி கூறுகிறார்கள். நான் மாணவர்களைக் கோபத்தில் திட்டியிருக்கிறேன்; அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், டைரியைக் கைப்பற்றியுள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.