
கரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் மிகத் தீவிரமாக பரவிவருகிறது. தமிழகத்திலும் கரோனாவின் பாதிப்பு அதிகளவில் இருந்துவருகிறது. இதனால், முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் வகுப்புகள் எடுக்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் அமைந்துள்ள பிரபல தனியார் பள்ளி ஒன்றில் பயிலும் மாணவிகள், தங்களின் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார்கள் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜகோபாலனை கைது செய்து விசாரணையை நடத்திய சென்னை அசோக் நகர் மகளிர் காவல்துறையினர், ராஜகோபாலன் மீது போக்சோ சட்டப்பிரிவு, 354ஏ (பாலியல் தொல்லை), தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவு உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, ராஜகோபாலன் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை நீதிமன்றத்தின் அனுமதியுடன் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.