
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே முறையாகப்பேருந்துகள் இயக்கப்படாததால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவிப்பதாகப் பள்ளி மாணவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திலிருந்து கோவில்பட்டி வழியாகச் சாத்தான்பாடிக்கு தினசரி ஐந்து முறை அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. கடந்த ஒரு வார காலமாக பள்ளி நேரங்களில் காலை மற்றும் மாலை வேளையில் பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும் எனக்கு கோரிக்கை வைத்து திடீரென நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும்மேலாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து நத்தம் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முறையாகப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தைக்கைவிட்டனர்.
Follow Us