ஆளும்கட்சி நிர்வாகியான பள்ளி மாணவன்! -அதிமுக ஐ.டி.விங் அலப்பறை!

School student posted ADMK IT Wing

“இத்தனைக்கும் ராமானுஜம் ரவி பள்ளியில்தான் படிக்கிறான். வாக்களிக்கும் வயதுகூட இல்லை. அச்சிறுவனை,விருதுநகர் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப ஒன்றிய துணை செயலாளராக நியமித்துள்ளது, அதிமுக தலைமை. 11-வது படிக்கும்போதே, அரசியல் கட்சியின் ஒன்றிய நிர்வாகி ஆகிவிட்டதால், அவனால் படிப்பில் எப்படி கவனம் செலுத்த முடியும்?”

School student posted ADMK IT Wing

ராமானுஜம் ரவி படித்துவரும், விருதுநகர் மாவட்டம் – சங்கரலிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் நம்மிடம் வேதனையுடன் கேட்டார். மாணவன் ராமனுஜம் ரவியின் போட்டோவை போட்டு, அந்த கிராமத்தில் போஸ்டரெல்லாம் ஒட்டியிருக்கின்றனர்.அவனுடன் படிக்கும் மாணவர்கள் “வாங்க ஒன்றியம்.. உங்களுக்கென்ன? இப்ப டிரைவிங் லைசன்ஸ் இல்லாமலே புல்லட் ஓட்டுறீங்க.. ஒன்றியம் ஆயிட்டீங்க.. இனி லைசன்ஸ் இல்லாமலே பிளைட்ல பறக்கிற பைலட் ஆயிருவீங்க.இந்த கெத்த வச்சி அடுத்து எம்.எல்.ஏ. ஆயிருவீங்க.. அப்புறம் அமைச்சராவீங்க. ம்ஹும். திடுதிப்புன்னு ஒருநாள் சி.எம். ஆயிருவீங்க.” என்று கிண்டல் செய்கின்றனராம்.

நாம், கைபேசி எண்ணில் ராமானுஜம் ரவியை தொடர்ந்து தொடர்புகொண்டோம். “ஏ தரையில நொர ததும்புரவர ஊத்தி குடிப்போம்.. நரம்புல பரவுற வர குஷியா குதிப்போம்..’ என்ற காலர் டியூனை மட்டுமே கேட்க முடிந்தது. ஒரு தடவை காலை அட்டென்ட் செய்து “நான் ரவியோட அண்ணன்.. தம்பி வந்தால் பேச சொல்லுறேன்..” என்று யாரோ ஒருவர் லைனைத் துண்டித்தார். அடுத்து, ராமானுஜம் நமது லைனுக்கு வராமல் புறக்கணித்தபடியே இருந்தார்.

School student posted ADMK IT Wing

“ஒன்றிய செயலாளர்கள் பரிந்துரை செய்தவர்களை, விருதுநகர் மாவட்ட கழக பொறுப்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, அப்படியே பட்டியலிட்டு தலைமையிடம் தந்தார். அதன்படி, போஸ்டிங் போட்டுவிட்டது தலைமை. ரவி ராமானுஜத்தை, கட்சியின் ஒன்றிய நிர்வாகி ஆக்குவதற்கு சிபாரிசு செய்தது, விருதுநகர் மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் தான்.” என்றார், அக்கட்சியின் விருதுநகர் ஒன்றிய பொறுப்பிலுள்ள ஒருவர்.

School student posted ADMK IT Wing

நாம் விருதுநகர் மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணனிடம் பேசினோம். “அப்படியா? எனக்குத் தெரியாதே? சிறுவனா? வாக்களிக்கும் வயதில்லையா? நான் ஆபீஸ்ல ராமானுஜம் ரவி அளித்த விண்ணப்பத்தைச் சரிபார்த்துவிட்டு பேசுகிறேன்.” என்றவர், மீண்டும் நம்மைத் தொடர்புகொண்டு “இளைஞர் பாசறைலகூட ஸ்கூல்ல படிக்கிறவங்கள சேர்க்கிறோம். அவன் ஸ்கூல் முடிச்சிட்டு, பாலிடெக்னிக் மொத வருஷம் போறதா சொல்லுறாங்க. என்னன்னு சரியா தெரியல. ஆமா.. இப்ப அவன் ஸ்கூல்ல படிச்சாதான் என்ன? பொறுப்பு கொடுக்கக்கூடாதா?” என்று மழுப்பி கேட்டார் எரிச்சலுடன்.

விருதுநகர் மாவட்ட கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “மாணவர்களுக்கு நேரடி அரசியல் கூடாது என்று வலியுறுத்தினார் தந்தை பெரியார். அதுவும்கூட கல்லூரி மாணவர்களுக்குத்தான் பொருந்தும். பள்ளி மாணவன் கட்சி பொறுப்பில் இருப்பது சரியில்லைதான். ஆனால், பள்ளி மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவதை தடுப்பதற்கான சட்டம் எதுவுமில்லை.” என்றார்.

School student posted ADMK IT Wing

அ.இ.அ.தி.மு.க. ‘பைலா’, ஆணோ, பெண்ணோ, 18 வயது பூர்த்தியானவர், அதற்கும் மேலான வயதினர் மட்டுமே கட்சியின் உறுப்பினராக முடியும் என்பதை தெளிவுபடுத்துகிறது. அந்த வகையில், ராமானுஜம் ரவி அதிமுக உறுப்பினராக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. கட்சியில் உறுப்பினராகக்கூட இல்லாத ஒரு சிறுவனை, நிர்வாகியாக நியமித்துள்ளனர். நல்லவேளை, நர்சரி பள்ளிக் குழந்தைக்கு கட்சிபொறுப்பு கொடுக்காத வரையிலும், நாடும் அரசியலும் பிழைத்தது!

admk it wing
இதையும் படியுங்கள்
Subscribe