மதுரை பாலமேட்டில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் சரவணகுமார். 11ம் தேதி மாலை 5 மணிக்கு பள்ளி விட்டதும் சரவணகுமாரின் புத்தக பையை சக மாணவர்கள் மறைத்து வைத்துள்ளனர். அதற்கு சரவணக்குமார் கோபப்பட்டுள்ளான். ஏன் என் பையை மறைத்து வைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளான்.

Advertisment

 shocking incident

அதற்கு சக மாணவர்கள் சரவணக்குமாரை தாக்கி, மேலும் சரவணக்குமாரின் முதுகில் பிளேடை வைத்து கிழித்துள்ளனர். இதனால் வலி தாங்க முடியாமல் சரவணக்குமார் கத்தியுள்ளான். அக்கம் பக்கத்தினர் சரவணக்குமாரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து அவனை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

madurai

Advertisment

இதுதொடர்பாக மாணவனின் தந்தை ராமு நம்மிடம், சார் அடிக்கடி என் மகன் வந்து அப்பா நாம் என்ன கீழ் சாதியா? கூட படிக்கும் மாணவர்கள் கேலி பேசுறாங்க. எனக்கு வெக்கமாக இருக்குப்பா. வேற பள்ளியில் சேருப்பா என்பான். எங்கு சேர்த்தாலும் இதே நிலைமைதான்பா. அதெல்லாம் பொருட்படுத்தாத. நல்லா படி அதுபோதும். கல்விதான் நம்மை காப்பாத்தும் என்று அறிவுரை சொல்வேன்.

வீட்டுக்கு வரும்போதெல்லாம் புத்தகத்தை காணும், பேனாவை காணும் உனக்கெல்லாம் சைக்கிளாடா? என்று டயரை பிளேடால் கிழித்து பஞ்சராக்கி விடுவார்கள். நான் பள்ளிக்கு போய் புகார் கொடுக்க போனா, என் மகன் வேணாம், அப்புறம் இன்னும் மோசமாக என்னை ஏதாவது செய்வாங்கன்னு சொல்லி அனுப்பிவிடுவான். ஆனா இந்த முறை என் மகனின் உயிருக்கே ஆபத்து வந்துருக்கு. முதுகில் பிளேடால் கிழித்து இரத்த கிளரியாக ஆக்கியதை என்னால தாங்கி கொள்ள முடியல. அதான் போலீசுல புகாரா கொடுத்திருக்கேன்.

படிப்புதான் எங்களை உயர்த்தும். சக மாணவர்களே இப்படி கொலை முயற்சி அளவுக்கு போனால் எப்படி படிக்க வைப்பது? இனி என் மகன் என் கூடவே செருப்பு தைக்க கூட்டிக்கிட்டு போகணுமா? நீங்களே சொல்லுங்க. எவ்வளவு இடர்பாடுகள் வந்தாலும் கட்டாயம் என் மகனை படிக்க வைப்பேன். இது என் வைராக்கியம் என்றார்.