கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள மாவட்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ். இவருடைய 13 வயது மகன் அங்குள்ள அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இத்தகைய சூழலில் தான் நேற்று (02.07.2025) மாலை 4 மணியளவில் மர்ம நபர்களால் சிறுவன் காரில் கடத்தி செல்லப்பட்டார். இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் மற்றும் கிராமத்தினர் இது குறித்து அஞ்செட்டி காவல் நிலையத்தில் நேற்று இரவு புகார் அளித்திருந்தனர். இருப்பினும் உரிய  நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி இன்று (03.07.2025) காலை அஞ்செட்டி - ஒகேனக்கல் சாலையில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறையில் ஈடுபட்டனர்.

அப்போது அஞ்செட்டியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் சடலம் இருப்பதாகத் தகவல் வந்தது. இதனையடுத்து போலீசாரும் மற்றும் உறவினர்களும்  சம்பவ இடத்துக்குச் சென்றனர். அப்போது வனப்பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவு பகுதியின் சாலையோரத்தில் சடலமாகக் கிடந்த சிறுவனை மீட்டு அங்கிருந்து சிறுவனின் சடலத்தைக் கொண்டு சென்று அஞ்செட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள சாலையில் வைத்துப் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக முதல் கட்டமாக 5 பேரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “இந்த கொலைக்குக் காரணமானவர்கள் யார் என்று தெரிய வேண்டும். சிறுவனைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டியது யார்?. அது தெரியும் வரை சிறுவனின் உடலைத் தரமாட்டோம் எங்களுக்குப் பிரேதப் பரிசோதனை முக்கியம் இல்லை. இதில் சம்பந்தப்பட்ட நபர் யார் என்பது அறிய வேண்டும். அதுவரைக்கும் நாங்கள் உடலை வழங்க மாட்டோம். பிரேதப் பரிசோதனை செய்யக்கூடாது. உடனடியாக உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் ” என வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

முன்னதாக அதே கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தன் காதலருடன் தனிமையில் இருந்ததை இந்த சிறுவன் பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதனால் நேற்று மாலை அந்த சிறுவனை அழைத்துச் சென்று சமாதானம் செய்ய யாருக்கும் சொல்லக்கூடாது என்று தெரிவிக்கும் வகையில் அந்த இளம்பெண் மற்றும் 2  சிறுவர்கள், கொலை செய்யப்பட்ட சிறுவனுடன் பேசிக்கொண்டிருந்தனர். இதனையடுத்து இரவு 8 மணியளவில் அந்த சிறுவனைக் கடத்திச் சென்று  சாலை ஓரத்தில் வீசி சென்றதாகக் கூறப்படுகிறது.