ADVERTISEMENT

விஷம் அருந்தி மாணவன் உயிரிழப்பு; பள்ளி சீருடையில் வந்த மாணவனுக்குத் தடை செய்யப்பட்ட விஷம் விற்றது எப்படி?

09:34 AM Jan 09, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக ஒரு வகையான எலியைக் கொல்லும் விஷத்தை பலர் சாப்பிட்டு சிகிச்சையளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அந்த வகையான விஷம் சாப்பிட்ட யாரும் உயிர் பிழைத்ததில்லை. அதனால் அந்த வகை விஷத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் எங்கேயும் விற்பனை செய்யக்கூடாது என்று ஒரு வருடங்களுக்கு மேலாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்தத் தடை அமலில் இருந்தாலும் பூச்சி மருந்துக் கடைகள் முதல் பெட்டிக் கடைகளில் கூட தற்போது வரை தாராளமாகக் கிடைப்பதால் அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறந்த நாளிலேயே +2 மாணவன் விஷம் சாப்பிட்டு ஒரு வாரம் சிகிச்சையிலிருந்து சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

அன்னவாசல் முக்கண்ணாமலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏழை கூலித் தொழிலாளி முகமது அப்பாஸ். இவர் தனது மகன் முகமது ஹனீப் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக புதுக்கோட்டையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கில வழியில் படிக்க வைத்துள்ளார். ஹனீப் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் மாணவனாக இருந்தான். தற்போது +2 படிக்கும் மாணவன் ஹனீப் அரையாண்டுத் தேர்வு எழுதி விடுமுறை முடிந்து கடந்த திங்கள் கிழமை மகிழ்ச்சியாக சக மாணவர்களுடன் பள்ளிக்கு வந்தான். தேர்வுத் தாள்கள் வழங்கப்பட்ட நிலையில் 600க்கு 487 மதிப்பெண்கள் பெற்றிருந்தான். தான் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்ற மனநிலைக்குப் போன மாணவன்., மாலை வழக்கமாக பேருந்து நிலையம் செல்லும் நண்பர்களுடன் போகவில்லை. ஆனால் ஊருக்குப் போக வழக்கமான குறிப்பிட்ட பேருந்தில் நண்பர்களுடன் ஏறி அமர்ந்த மாணவனுக்கு அரை மணி நேரத்தில் நெஞ்சு எரிச்சல், வயிற்றுவலி, மயக்கம் வருவதாகச் சொல்ல சக மாணவர்கள் அன்னவாசல் அரசு மருத்துவமனையில் இறக்கி சிகிச்சைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அப்போதுதான் தெரிந்துள்ளது மாணவன் எலி விஷம் சாப்பிட்டது. அன்னவாசலில் முதலுதவி சிகிச்சை அளித்த பின் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பல்வேறு பரிசோதனையில் மாணவன் குடலில் விஷம் ஒட்டியுள்ளது தெரிய வந்தது. மாணவன் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். பள்ளி முடிந்து சக மாணவர்களுடன் வரவேண்டிய மாணவன் மதிப்பெண் குறைந்ததை நினைத்து தனியாக வந்து பேருந்து நிலையம் செல்லும் முன்பே உள்ள ஒரு பிரபலமான தனியார் மருத்துவமனை அருகே உள்ள பூச்சி மருந்துக் கடையில் ரூ.20 கொடுத்து எலி விஷம் வாங்கி அங்கேயே சாப்பிட்டு தண்ணீர் குடித்துவிட்டு பேருந்து ஏறச் சென்றுள்ளார்.

மாவட்டம் முழுவதும் இந்த விஷம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பள்ளி சீருடையில் வந்த மாணவனுக்கு எப்படி விஷம் விற்றார்கள்? மனித உயிர்களைவிட 10, 20 ரூபாய் முக்கியமாகிவிட்டதா? இந்தப் பிரச்சனையில் அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுப்பார்கள் என்று உறவினர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பெரிதும் வேதனையளிப்பதாகக் கூறுகின்றனர் உறவினர்கள். இதுபோல அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால் இன்னும் எத்தனை உயிர்களைக் காவு வாங்குவார்களோ என்று வேதனையுடன் கூறுகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT