school student incident pocso act youth police

Advertisment

தர்மபுரி அருகே, பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், கோபிநாதம்பட்டியைச் சேர்ந்தவர் காத்தவராயன். இவருடைய மகள் சாய் பிரியா (வயது15), (தந்தை மற்றும் மகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு எழுதியுள்ள சாய் பிரியா, அதன் முடிவுக்காக காத்திருக்கிறார்.

அதே ஊரைச் சேர்ந்த இளங்கோவன் என்பவருடைய மகன் இளவரசன் (வயது 26). இவரும், சாய் பிரியாவும் காதலித்து வந்துள்ளனர். இதையறிந்த சாய் பிரியாவின் பெற்றோர் மகளை கண்டித்தனர்.

Advertisment

இந்த நிலையில், ஜூன் 8- ஆம் தேதி பெற்றோர் வேலைக்காக வெளியே சென்றிருந்த நிலையில், சாய் பிரியா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். வேலை முடிந்து, மாலையில் பெற்றோர் வீடு திரும்பினர். ஆனால் வீடு பூட்டப்பட்டு இருந்தது. மகளும் காணாமல் போயிருந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சாய் பிரியாவின் பெற்றோர், கோபிநாதம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், தனது மகளை இளவரசன் கடத்திச் சென்றிருக்கலாம் என கூறியிருந்தனர். அதன்பேரில் காவல்துறையினர் சாய் பிரியாவையும், இளவரசனையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில், அவர்கள் இருவரும் அரூரில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அங்கு சென்ற காவல்துறையினர் சாய் பிரியாவை மீட்டனர். இளவரசனை கைது செய்து, காவல்நிலையம் அழைத்து வந்தனர். 18 வயது நிரம்பாத சிறுமியை கடத்தியது மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.