
ஈரோடு மாவட்டம் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளான மணிக்கூண்டு ரோடு, டி.வி.எஸ். வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, என்.எம்.எஸ்.காம்பவுண்ட், காமராஜர் வீதி, பிருந்தாவீதி உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு தொடங்கி, செவ்வாய்க்கிழமை இரவு வரை ஜவுளி வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இது தவிர, ஜவுளி குடோன்களிலும் ஜவுளி விற்பனை நடைபெறுவது வழக்கம். தென்னிந்திய அளவில் பிரசித்தி பெற்ற ஈரோடு ஜவுளி வார சந்தைக்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து, ஜவுளி கொள்முதல் செய்து செல்வார்கள்.
இந்நிலையில், இந்த வார ஜவுளிச்சந்தை நேற்று இரவு தொடங்கி இன்று மாலை வரை நடைபெற்றது. கடந்த சில வாரமாக வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. ஆந்திராவில் இருந்து மட்டும் ஒரு சில வியாபாரிகள் வந்திருந்தனர்.இதனால் மொத்த வியாபாரம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. அதேநேரம் உள்ளூர் வியாபாரிகள் அதிக அளவில் வந்ததால் சில்லறை வியாபாரம் அமோகமாக நடைபெற்றது.
இந்த வார ஜவுளி மார்கெட்டுக்கு உள்ளூர் வியாபாரிகள் வருகை அதிக அளவில் இருந்தது. இதனால், இந்த வாரம் சில்லறை விற்பனை மட்டுமே 40 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதே சமயம் வெளிமாநில வியாபாரிகள் குறைந்த அளவே வந்திருந்ததால் மொத்த வியாபாரம் 20 சதவீதம் மட்டுமே நடைபெற்றது என வியாபாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து குறைந்த அளவே வியாபாரிகள் வந்திருந்தனர்.
இது குறித்து ஜவுளி வியாபாரிகள் கூறுகையில், கடந்த சில வாரங்களாக ஈரோடு ஜவுளி வாரச் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் குறைந்த அளவே வருவதால் மொத்த வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்று வருகிறது. அதே சமயம் உள்ளூர் வியாபாரிகள் அதிகளவில் வருவதால் சில்லறை விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜூன் 2 ஆம் தேதி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி திறப்பை முன்னிட்டு துணிகள் அதிக அளவில் விற்பனை நடந்து வருகிறது என்றனர்.