/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2907.jpg)
கடலூர் மாவட்டம், விருதாச்சலம் ஆயியார் மடத்தை சேர்ந்தவர்கள் கோபி-இளவரசி தம்பதியினர். கோபி, விருதாச்சலத்தில் செல் சர்வீஸ் சென்டர் கடை நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், இரண்டாவது மகள் விருதாச்சலம் வடக்கு பெரியார் நகரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று பள்ளிக்குச் சென்ற மாணவி மாதாந்திர தேர்வு எழுதி உள்ளார். தேர்வு எழுதிவிட்டு பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மாணவி, மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில், வீட்டில் யாரும் இல்லாத போது, வீட்டில் உள்ள அறையில் துணியால் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய மாணவியின் பெற்றோர்கள், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மகளை கண்டதும் கதறி அழுதனர்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று, மாணவியின் உடலை தூக்கு கயிற்றில் இருந்து கீழே இறக்கி உள்ளனர். பின்னர் மாணவியின் உடலை அடக்கம் செய்வதற்காக, மாணவியின் பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள் பந்தல் அமைத்து இறுதிச் சடங்குக்கான வேலைகளை செய்து கொண்டிருந்தனர். இதனிடையே இதுகுறித்து விருதாச்சலம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததால், விரைந்து சென்ற காவல்துறையினர், இறுதி சடங்குக்காக வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
மாணவி மிகவும் திறமைசாலி எனவும், கடந்த சில நாட்களாக கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், சரியாக படிக்க முடியவில்லை என்று கூறியதாக சொல்லப்படுகிறது. மாணவியின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பதையும், தற்கொலை செய்து கொண்ட மாணவி இறப்பதற்கு முன்பு கடிதம் ஏதாவது எழுதி வைத்துள்ளாரா? என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)