School girl lose their live in private bus collision in front of father

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகள் ரீனா (17). அரக்கோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் -2 படித்து வந்தார். நேற்று இரவு பள்ளியில் சிறப்பு வகுப்பு முடிந்து தனது தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். கும்பினிபேட்டை அருகில் செல்லும்போது எதிரே வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் நிலை தடுமாறி தந்தை, மகள் கீழே விழுந்தனர் . இதில் பேருந்து சக்கரத்தில் சிக்கி மாணவி ரீனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த ஆத்திரத்தில் மாணவியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அந்த வழியாக சென்ற பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் அரக்கோணம் சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன் பேச்சுவார்த்தை நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தார். இந்த விபத்து குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.