பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 7 பேருக்குச் சாகும் வரை சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையம் பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு, 11ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர் ஆண் நண்பருடன் பூங்காவில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த கும்பல் பள்ளி சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக 7 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்தவழக்கில் இன்று (18.07.2025) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில்,“பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மணிகண்டன் (ஏ 1), கார்த்திக் (ஏ 2), ஆட்டோ ஓட்டுநரான மணிகண்டன் (ஏ 3), ராகுல் (ஏ 4), பிரகாஷ் (ஏ 5), நாரயணமூர்த்தி (ஏ 6), மற்றும் கார்த்திகேயன் (ஏ 7) ஆகிய 7 பேருக்குச் சாகும் வரை (வாழ்நாள்) சிறை தண்டனை விதிக்கப்படுகிறது” என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.