Advertisment

கரோனா வைரஸ் தொற்று பொது முடக்கத்தின் போது கல்விக்கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியதை, அப்படியேகாற்றில் பறக்கவிட்டு, இன்ன தேதிக்குள் கல்விக்கட்டணத்தை செலுத்தியே ஆகவேண்டுமென பெற்றோர்களுக்கு ஓலை அனுப்பியுள்ளது சில தனியார் பள்ளி நிறுவனங்கள்.

சிவகங்கை மாவட்டத்தினைபொறுத்தவரை சிவகங்கை கல்வி மாவட்டம் எனவும், தேவக்கோட்டை கல்வி மாவட்டம் எனவும் நிர்வாக ரீதியாக இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் ஒட்டு மொத்தமாக அரசு உயர்நிலை பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, நகராட்சி உயர்நிலை பள்ளி, புனர்வாழ்வு மேல்நிலைப்பள்ளி, சமூக நல பள்ளி, அரசு உதவிபெறும் உயர்நிலை பள்ளி, அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி,சுய நிதி உயர்நிலை பள்ளி, சுய நிதி மேல்நிலைப்பள்ளி, ஆதிதிராவிடர் உயர்நிலை பள்ளி, ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி, அரசு மாதிரி பள்ளிகள் உள்ளிட்ட 206 அரசு பள்ளிகளும், தனியார் பள்ளிகளான மெட்ரிக் பள்ளிகள் சுமார் 60க்கும் மேற்பட்டவைகளும், சிபிஎஸ்இ பள்ளிகள் 15க்கு மேற்பட்டும் இயங்கி வருகின்றன. கரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 25 முதல் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைத்து பள்ளிக்கல்வி நிலையங்களுக்கும் கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டது. நடைமுறையில் இருக்கும் இந்த ஊரடங்கு வருகின்ற 31ம் தேதி நிறைவடையும் தருவாயில், அடுத்து ஊரடங்கு தொடருமா.? பள்ளியை எப்பொழுது திறக்கலாம்..? பல கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகின்றது மாநில அரசு.

இது இப்படியிருக்க ஆலோசனையில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனோ, "பொது முடக்கத்தின்போது தனியார் பள்ளிகள் ஆன்லைனில் வகுப்பு எடுக்கக்கூடாது.! கல்விக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது.! இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியவர், "பள்ளி தாமதமாக திறக்கவுள்ளதால் பாடத்திட்டத்தினை குறைக்கவும் ஆலோசனை நடத்துவதாகவும்" அறிவித்திருந்தார். அதற்கடுத்த சில நொடிகளிலேயே, அமைச்சர் அறிவித்ததனை புறந்தள்ளி சிவகங்கையை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றும், காரைக்குடியை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றும் "அரசாங்க ஆணைப்படி தேர்ச்சிப் பெற்ற நீங்கள் அனைவரும் இன்ன தேதிக்குள் பள்ளிக்கட்டணத்தையும், புத்தகக்கட்டணத்தையும் செலுத்தியாக வேண்டுமென" அந்தப் பள்ளியில் பயிலும் மாணாக்கர்களின் பெற்றோர்களுக்கு ஓலையை அனுப்பியது.

Advertisment

nakkheeran app

"கடுமையான அதிர்ச்சி இது! அடுத்த வேளை உணவிற்கேபோராடும் லாக்டவுன் காலத்தில் அமைச்சர் கூறிய கூற்றுக்கு என்ன மரியாதை இங்குள்ளது.? தங்களுடைய சுய நலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு, பணம் வசூலிப்பதையே கருத்தாக கொண்டு செயல்படும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார் சிவகங்கையை சேர்ந்த சமூக ஆர்வலரான சோனைமுத்து.

இதுகுறித்து கருத்தறிய சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாலு முத்துவைதொடர்பு கொண்டபோது, " இதுகண்டிக்கதக்கது.! அரசின் உத்தரவினை மீறும் அந்தப் பள்ளிகள் மீது மீது நடவடிக்கை பாயும்.!" என்றார்.

இந்நிலையில், ஓலை அனுப்பியஇரு தனியார் பள்ளிகளில், காரைக்குடியை தனியார் பள்ளி நிர்வாகம், "இது தவறுதலாக நடந்துவிட்டது. அரசு அறிவித்தபின் பள்ளிக்கட்டணத்தைக் கட்டலாம்" என ஜகா வாங்கியது., பள்ளிக்கட்டண விவகாரம் பெற்றோர்களிடையே கடும் அதிர்ச்சியையும், கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.