Thamimun Ansari

Advertisment

கரோனா நெருக்கடியிலும் கல்விக் கட்டணம் வசூலிப்பதா என நாகை எம்எல்ஏவும், மஜக பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் ஊரடங்கு காரணமாக பெற்றோர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலையில், அவர்களின் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை இம்மாதம் செலுத்த வேண்டும் என்று சிலதனியார் பள்ளிகள் தகவல் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

கட்டணம் செலுத்தாத மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளன.தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பீதி காரணமாக கடந்த 50 நாட்களாக மக்கள் வருவாய் இழந்து தவிக்கின்றனர்.குறிப்பாக நடுத்தர குடும்பத்தினர் வெளியில் கூற முடியாத நெருக்கடியில் உள்ளனர்.ஏழைகள் பாடு மிகவும் மோசமாக உள்ளது.

Advertisment

தற்போது அன்றாட உணவு உள்ளிட்ட தேவைகளுக்கே அரசின் உதவியையும், மற்றவர்களின் உதவியையும் எதிர்பார்த்திருக்கும் அவர்களிடம், கல்விக் கட்டணத்தை உடனடியாக செலுத்தும்படி கட்டாயப்படுத்துவது எந்த வகையிலும் நியாயமல்ல.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கல்விக்கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.தேசியப் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி தமிழக அரசின் தலைமைச் செயலாளரும் இது குறித்து அரசாணையும் வெளியிட்டிருந்தார்.அதன் பிறகும் தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் கட்டாயக் கட்டண வசூல் செய்வது கண்டிக்கத்தக்கது.

மூன்றாவது கட்ட ஊரடங்கு முடிந்து இம்மாதம் நான்காம் கட்ட ஊரடங்கு தொடங்க உள்ளது.அதன் பிறகும் எப்போது இயல்பு நிலை திரும்பும்? எப்போது வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும்? என்பது தெரியவில்லை.பள்ளிகள் ஜுன் மாதம் திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

இத்தகைய சூழலில் இம்மாதம் கல்வி கட்டணம்செலுத்தாத குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் சேர்க்கப்பட மாட்டார்கள்; அவர்களுக்கான வகுப்புகள் மீண்டும் நடத்தப்பட மாட்டாது என்று பள்ளி நிர்வாகங்கள் எச்சரிப்பது மனிதாபிமானமற்ற செயலாகும்.

கல்வியாண்டிற்கான அடிப்படை வேலைகளை தொடங்குதல், நிர்வாக செலவுகள், சம்பளம் கொடுத்தல் என சில சிரமங்கள் கல்வி நிறுவனங்களுக்கு உண்டு. அதை புரிய முடிகிறது.ஆயினும் மக்களின் வாழ்வியல் நெருக்கடிகளை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கரோனா அச்சம் தொடர்பாக நெருக்கடிகள் சரியாகும் வரை கல்விக்கட்டணம் வசூலிப்பதை கருணை அடிப்படையில் தனியார் பள்ளி நிர்வாகங்கள் நிறுத்தி வைக்க வேண்டும்.அதையும் மீறி கல்விக் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை அச்சுறுத்தும் பள்ளி நிர்வாகங்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்'' இவ்வாறு கூறியுள்ளார்.