Skip to main content

விஞ்ஞான ஊழலில்  பள்ளிக்கல்வித்துறை! தரமற்ற பொருள்கள் சப்ளை; பல கோடி ரூபாய் நூதன கொள்ளை!

Published on 09/07/2019 | Edited on 09/07/2019

 


அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தரமற்ற விளையாட்டு உபகரணங்கள், முதலுதவிப்பெட்டி, கதைப்புத்தகங்கள் மூலம், ஆளும் அதிமுக அரசு விஞ்ஞான ரீதியில் பல கோடி ரூபாயை சுருட்டியுள்ளதாக ஆசிரியர்கள் தரப்பில் புகார்கள் எழுந்துள்ளன.

 

b

 

தமிழகம் முழுவதும் 35177 அரசு தொடக்கப்பள்ளிகளும், 9750 நடுநிலைப்பள்ளிகளும், 5602 உயர்நிலைப்பள்ளிகளும், 6299 மேல்நிலைப்பள்ளிகளும் என மொத்தம் 56828 பள்ளிகள் செயல்படுகின்றன. பள்ளிக்கல்வித்துறைக்கு நடப்பு 2018-2019ம் ஆண்டிற்கு 28757 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிதியின் மூலமே ஆசிரியர்களின் ஊதியம், பள்ளிக் குழந்தைகளுக்கான பதினான்கு வகையான விலையில்லா பொருள்கள், பள்ளி பராமரிப்பு ஆகியவற்றுக்கு செலவிடப்படுகிறது.

 

b


ஆனால், மாணவர்கள் நலன் என்ற பெயரில் பள்ளிகளுக்கு வழங்கப்படும் பல உபகரணங்கள் தரமற்று இருப்பதாக ஆசிரியர்கள் தரப்பில் பரவலாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, இரண்டு வகைகளில் விஞ்ஞான ரீதியில் ஓசையேயின்றி, பள்ளிக்கல்வித்துறையில் மாபெரும் ஊழல்கள் அரங்கேறி வருவதாக கூறுகின்றனர். ஒன்று, பள்ளிகளுக்கு வழங்கப்படும் பொருள்களுக்கு சந்தை விலையைக் காட்டிலும் இரட்டிப்பு மடங்கு விலை வைப்பது; இரண்டாவது, முற்றிலும் தரமற்ற பொருள்களை விநியோகம் செய்வது. இந்த இரண்டு வழிகளிலும் நூதன முறையில் பல கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

 

b

 

இதுபற்றி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசினர்.


''அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்கிக் கொள்வதற்காக எஸ்எஸ்ஏ (சமக்ர சிக்ஷா அபியான்) திட்டத்தின் மூலம் தொடக்கப்பள்ளிகளுக்கு தலா 4000 ரூபாய் வழங்கப்பட்டது. நடுநிலைப்பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்களுக்காக 6000 ரூபாயும், அத்துடன் முதலுதவிப் பெட்டிக்கு 2000 ரூபாயும் சேர்த்து மொத்தம் 8000 ரூபாய் வழங்கப்பட்டது. இத்தொகை, அந்தந்தப் பள்ளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு இருந்தது.

b


கடந்த சில மாதங்களுக்கு முன்பு, விளையாட்டு உபகரணங்கள், முதலுதவிப் பெட்டிகள் ஒவ்வொரு வட்டார வள மையத்திலும் வந்திறங்கியது. அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் நேரில் சென்று அவற்றைப் பெற்றுக்கொண்டனர். அப்போது, எஸ்எஸ்ஏ திட்ட மேற்பார்வையாளர்களிடம் தலைமை ஆசிரியர்கள் 4000 மற்றும் 6000 ரூபாய்க்கான தொகையை காசோலையாக கொடுத்து, உபகரணங்களைப் பெற்றுக்கொண்டதற்கான பயன்பாட்டுச் சான்றிதழ் பதிவேட்டில் கையொப்பமிட்டனர். 


நடுநிலைப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணப் பெட்டியில் ரப்பர் டிஸ்கஸ்&1, ஸ்கிப்பிங் கயிறு&6, கிரிக்கெட் பேட்-2, டென்னிஸ் பந்து-6, கையுந்துப்பந்து-1, கையுந்துப்பந்து வலை-1, கைப்பந்து-2, கையெறி பந்து-1, ரக்பி பந்து-2, கூடைப்பந்து-1, கால்பந்து-2, ஃபிரீஸ்பீ (பறக்கும் தட்டு)-3, சாசர் கோன்-10, காலால் மிதித்து காற்றடிக்கும் பம்ப்-1, முதலுதவிப் பெட்டி-1, மார்க்கர் கோன்-9 ஆகிய உபகரணங்கள் இருந்தன.


இந்த உபகரணங்களை, சேலத்தைச் சேர்ந்த பராசக்தி எஜூகேஷனல் நீட்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்திருந்தது. ஆளுங்கட்சியுடன் நெருக்கமாக இருக்கும் நிறுவனங்கள் இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கான ஒப்பந்த உரிமையைப் பெற்று, பள்ளிகளுக்கு உபகரணங்களை விநியோகம் செய்துள்ளன.  

a


விளையாட்டு உபகரணங்களின் விலை விவரங்களை ஆன்லைன் நிறுவனங்களில் விசாரித்தபோது, மொத்தமே 5225 ரூபாய்தான் ஆகிறது. ஆனால், எஸ்எஸ்ஏ திட்டத்தில் இவற்றுக்காக ஒவ்வொரு நடுநிலைப் பள்ளியிடம் இருந்தும் 8000 ரூபாய் பெறப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளிகளிடம் 2000 பெறுமான உள்ள பொருள்களை கொடுத்துவிட்டு 4000 ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளன. இப்படி தமிழ்நாடு முழுவதும் 3 ஆசிரியர்களுக்கு மேல் பணியாற்றும் 30000க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகளுக்கு இந்த உபகரணங்கள் வழங்கியதில் சத்தமே இல்லாமல் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.


முதலுதவிப் பெட்டியில் உள்ள பொருள்களின் மொத்த மதிப்பே 700 ரூபாய்க்கும் குறைவுதான். ஆனால், அதை 1300க்கு கொள்முதல் செய்திருக்கிறது பள்ளிக்கல்வித்துறை. 5 லட்சம் ரூபாய்க்கு மேல் பட்ஜெட் கொண்ட திட்டங்களுக்கு வெளிப்படையாக டெண்டர் விட வேண்டும். ஆனால், தமிழக அரசு அந்தந்த மாவட்டத்தில் ஆளுங்கட்சிக்கு நெருக்கமான நிறுவனங்களுக்கு வாய்மொழியாக ஒப்பந்தம் கொடுத்து, ஊழலை அரங்கேற்றியுள்ளது,'' என்கிறார்கள் ஆசிரியர் சங்க நிர்வாகிகள்.


இது மட்டுமின்றி, அரசு நடுநிலைப்பள்ளிகளுக்கு ஆசிரியர், மாணவர்களின் வருகையைப் பதிவு செய்வதற்காக 'லெனோவா டேப் 7' பிராண்டு டேப்லெட் வழங்கப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை அப்போது இதை, நவீன தொழில்நுட்பம் என தம்பட்டம் அடித்துக்கொண்டது. ஒவ்வொரு டேப்லெட்டையும் தலா 13500 ரூபாய்க்கு கொள்முதல் செய்துள்ளது. இதன் ஆன்லைன் விற்பனை விலை வெறும் 9899 ரூபாய்தான். இதன்மூலம் ஒவ்வொரு பள்ளியிடம் இருந்தும் தலா 3601 ரூபாய்களை சுரண்டி உண்டு கொழுத்திருக்கிறது பள்ளிக்கல்வித்துறை. 


அதேபோல், நடுநிலைப்பள்ளிகளுக்கு சிறுவர் கதைப்புத்தகங்கள், நன்னெறிக் கதைகள், சுயமுன்னேற்ற நூல்கள், தலைவர்களின் வரலாறு என 106 தலைப்புகளில் புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஞானம் புக் ஏஜன்சி என்ற நிறுவனத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, ஒவ்வொரு பள்ளியிடம் இருந்தும் பத்தாயிரம் ரூபாய் பெறப்பட்டுள்ளது. 


ஞானம் புக் ஏஜன்சி வழங்கிய பில்லில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, அந்த எண் நந்தினி புக்ஸ் என்ற பெயரில் பதிவாகி இருந்தது. தொடர்ச்சியாக முயன்றும் யாரும் அழைப்பை எடுத்துப்பேசவே இல்லை. கூகுள் வரைபடத்திலும் சைதாப்பேட்டையில் ஞானம் புக் ஏஜன்சி என்ற பெயரில் நிறுவனம் இல்லாததும் தெரிய வந்தது.  


பல ஆண்டுகளாக பள்ளிகளுக்கு சிறுவர் கதைப்புத்தகங்களை விநியோகம் செய்து வந்த நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தின் சேலம் கிளை மேலாளர் கணேசன், 'இப்போது எல்லாமே காசுதான். ஆளுங்கட்சியினருக்கு யார் அதிக கமிஷன் கொடுக்கிறார்களோ அவர்களுக்குதான் புத்தக ஆர்டர் வழங்குகின்றனர். கமிஷன் கொ டுத்து ஆர்டர்கள் பெறுவதில் உடன்பாடு இல்லாததால், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்துக்கு இப்போது அரசு ஒப்பந்தம் கிடைப்பதில்லை,' என்றார்.


ஞானம் புத்தக ஏஜன்சி, ஆங்கில மொழியில் விநியோகம் செய்திருந்த எந்த ஒரு புத்தகத்திலும் விற்பனை விலையை குறிப்பிடவில்லை. அதேநேரம், அவற்றுக்கு தனித்தனியாக பில்லில் விலை குறிப்பிடப்பட்டு இருந்தது. 20 ரூபாய் மதிப்புள்ள பல புத்தகங்கள் 75 ரூபாய் என்ற அளவில் பள்ளிக்கல்வித்துறை கொள்முதல் செய்து, மக்களிடம் சுரண்டியிருக்கிறது.


கடந்த ஜனவரியில் ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்ட பலருக்கு பதவி உயர்வை ரத்து செய்துள்ளது பள்ளிக்கல்வித்துறை. இப்போதும், பலருக்கு 17 பி பிரிவின் கீழ் விளக்கம் கேட்டு குறிப்பாணை கொடுக்கப்பட்டு உள்ளது. அதனால் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பலரும்கூட இதுகுறித்து வெளிப்படையாக பேசத் தயங்குகின்றனர். 


இதுகுறித்து எஸ்எஸ்ஏ திட்ட ஊழியர்களிடம் கேட்டபோது, ''விளையாட்டு உபகரணங்கள், புத்தகங்களை அந்தந்தப் பள்ளிகளே வாங்கிக் கொள்வதற்காகத்தான் பள்ளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக தொகை செலுத்தப்பட்டு இருந்தது. இதில் எஸ்எஸ்ஏ திட்ட அதிகாரிகளுக்கு எந்தத் தொடர்பும் இல்லை.  


பள்ளிக்கல்வித்துறையில் நடந்துள்ள இந்த விஞ்ஞானப்பூர்வ ஊழல் குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவின் கருத்தறிய, அவருடைய அலுவலக எண்ணிற்கு பலமுறை தொடர்பு கொண்டபோது, அவர் பிஸியாக இருப்பதாகவே நமக்கு தகவல் கிடைத்தன. 


பின்னர் இதுபற்றி நாம் அதிமுக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான செம்மலையிடம் கேட்டதற்கு, ''பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்கள் தரமானவையா இல்லையா? அதில் உள்ள பிரச்னைகள் என்ன? என்பது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன்,'' என்றார். 


பள்ளிக்கல்வித்துறையில் தோண்டித்துருவினால் மேலும் பல ஊழல் பூதங்கள் கிளம்பலாம்.


 

சார்ந்த செய்திகள்