திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி தெருவை சேர்ந்தவர் மனோதீபன். இவருடைய மகள்களான பத்து வயது வான்மதியும், ஏழுவயதான குருநிலாவும் மே மாத விடுமுறையில் புதிய சைக்கிள் வாங்குவதற்காக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்தே உண்டியலில் பணம் சேர்த்து வந்துள்ளனர்.

Advertisment

ஆனால் திடீரென கரோனா வைரஸ் மூலம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வீட்டிலேயே தனித்திருந்த சிறுமிகள் இருவரும், வாழ்வாதாரம் இழந்து பலரும் வாடுவதை தொலைக்காட்சிகள் மூலம் நாள்தோறும் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்தநிலையில் சிறுமிகள் தங்களால் முயன்றவரை யாருக்காவது ஏதாவது செய்ய வேண்டும் என முடிவெடுத்தனர்.

Advertisment

தங்களது உண்டியல் சேமிப்பு பணமான ரூபாய் 8 ஆயிரத்தை தங்கள் அம்மா அருணாவிடம் கொடுத்து, இந்த பணத்தை வைத்து யாராவது சிலருக்கு பசியாற்ற முடிந்த உதவியை செய்யுமாறு கேட்டுள்ளனர். அதன் அடிப்படையில் வத்தலக்குண்டு புதுப்பட்டியில் உள்ள ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் குடும்பத்தினருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை சிறுமிகள் வாங்கிக் கொடுத்தனர். சிறுமிகளின் இச்செயலை கண்டு வத்தலகுண்டு நகர் மக்கள் பாராட்டி வருகிறார்கள்.