school bus suddenly caught incident on the road

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த கூவல் குட்டை பகுதியில் தனியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆலங்காயம், வாணியம்பாடி பகுதியைச் சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த பலநூறு மாணவ – மாணவிகள்படிக்கின்றனர். இவர்களுக்காகப் பள்ளி நிர்வாகம் கட்டண பேருந்து இயக்கி வருகிறது.

இந்நிலையில் ஜனவரி 10 ஆம் தேதி மாலை பள்ளி நேரம் முடிந்ததும்4.30 மணியளவில் 44 மாணவ – மாணவிகள், மூன்று ஆசிரியர்களைப் பள்ளியிலிருந்து ஏற்றிக்கொண்டு வெள்ளக்குட்டை நோக்கி புறப்பட்டது பள்ளிப் பேருந்து. பள்ளி வளாகத்தை விட்டு பேருந்து வெளியே வந்து சென்று கொண்டிருந்தபோது வாணியம்பாடி அடுத்த சுண்ணாம்புப் பள்ளம் என்கிற இடத்தின் அருகே திடீரென பேருந்து நின்றது.மீண்டும் ஸ்டார்ட்டாகவில்லை. பேருந்து ஓட்டுநர் கீழே இறங்கி பேட்டரி செக் செய்தபோது, பேட்டரி ஒயர் சார்ட்ஷர்குட்டாகி எரியத்தொடங்கியது.

இதனைப் பார்த்து அதிர்ந்து போன ஓட்டுநர் உடனடியாக ஓடிச்சென்று பேருந்தில் இருந்த குழந்தைகள், பிள்ளைகளைப் பேருந்திலிருந்து இறங்கச் சொல்லி கத்தினார். மாணவ – மாணவிகள் அவசர அவசரமாகப் பேருந்திலிருந்து தங்களது புத்தகப் பையை எடுத்துக்கொண்டு இறங்கி ஓடினர். அப்போது பேருந்துக்குள் புகை அதிகரிக்கத் துவங்கியது, பள்ளிப் பிள்ளைகள் அலறியபடி பேருந்திலிருந்து இறங்கி பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடினர். அடுத்த இரண்டு நிமிடங்களில் பேருந்து தீப்பிடித்து திகுதிகுவென எரியத்துவங்கியது.

Advertisment

சாலையில் பேருந்து எரிவதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.உடனே தீயணைப்பு நிலையத்துக்குத்தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர். ஆலங்காயத்தில் இருந்து தீயணைப்புத்துறையினர் வருகை தந்து 1 மணி நேரம் போராடித்தீயை அணைத்தனர். அணைக்கப்பட்ட பேருந்துக்குள் பள்ளிப் பிள்ளைகளின் வாட்டர் பாட்டில்கள், சாப்பாடு டப்பாக்கள்எரிந்தும்உருகியும் பல இருந்தன. இது குறித்து ஆலங்காயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிப் பேருந்துகள் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி தொடங்குவதற்கு முன்பு மே, ஜூன் மாதங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஆய்வாளர்களால் தங்களது லிமிட்டில் உள்ள பேருந்துகளை ஆய்வு செய்ய வேண்டும் என்பது அரசாங்கத்தின் உத்தரவு. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் பேருந்துகள் ஆய்வு செய்யப்படுகிறது.இந்த ஆய்வுகள் மேம்போக்காக நடத்தப்படுகின்றன.ஒவ்வொரு பள்ளியும், கல்லூரியும் ஒரு பேருந்துக்கு இவ்வளவு என ரேட் பிக்ஸ் செய்து அதனை வாங்கிக்கொண்டு ஆய்வு செய்ததுபோல் பேருந்து நன்றாக இருக்கிறது எனச் சான்றிதழ் தந்து அனுப்பி விடுகின்றனர் அதிகாரிகள். அப்படி ஆறு மாதத்துக்கு முன்பு மேம்போக்காக ஆய்வு செய்யப்பட்ட சரியாகப் பராமரிக்காத இந்தப் பள்ளிப் பேருந்து தீப்பற்றி முழு பேருந்தும் எரிந்துள்ளது எனக் குற்றம்சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

பேருந்து தீப்பிடிக்கும் போது உள்ளே பள்ளிப் பிள்ளைகள் இருந்தனர். ஓட்டுநரின் சமயோஜித்தால் உடனடியாக அவர்களை அவசர அவசரமாகக் கீழே இறக்கி பாதுகாப்பாக அழைத்துச் சென்றால் பிள்ளைகள் உயிர்த்தப்பினர்.