
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவிகள் மற்றும் மாணவர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பள்ளி வளாகத்தில் சேகரிக்கப்பட்ட குப்பையை வெளியே எடுத்து வந்து கொட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் அக்கராயபாளையத்தில் தூய சகாய அன்னை ஆர் சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த திங்கள் அன்று பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பள்ளி வளாகத்தில் சேகரிக்கப்பட்ட குப்பையை சாக்குப் பையில் சுமந்து கொண்டு வெளியே எடுத்துவந்த பள்ளி மாணவிகள் மற்றும் மாணவர்கள் அதை சாலையின் ஒரு பகுதியில் குப்பைகளை கொட்டியுள்ளனர்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சம்பந்தப்பட்ட பள்ளிக்கு முன்பான சாலை பரபரப்பாக இருக்கும் சாலையாகும் அதிகமாக வாகனங்கள் செல்லும் நிலையில் ஆபத்தான முறையில் சாக்கு பையில் குப்பைகளை இருபுறமும் பிடித்தபடி ஏந்திக்கொண்டு மாணவர்கள் சென்று கொட்டியுள்ளனர். தூய்மை பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தி பள்ளி நிர்வாகம் மீது மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.