ADVERTISEMENT

‘ஆத்திரத்தில் மாணவர்கள்... பதைபதைத்த பெற்றோர்கள்’ - நெல்லையை கலங்கடித்த விபத்து!

10:30 AM Dec 18, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நெல்லை டவுன் நெல்லையப்பர் சுவாமி பெருவழிச் சாலையில் அரசுப் பொருட்காட்சித் திடலுக்கு எதிரே உள்ளது தனியார் சி.எஸ்.ஐ அமைப்பின் அரசு உதவி பெறும் சாப்ஃடர் மேல்நிலைப்பள்ளி. நெல்லை வரலாற்றிலே 100 ஆண்டுகாலம் பாரம்பரியமுள்ள பழமையான முதல் தனியார் பள்ளி. ஆரம்ப வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை வளர்ந்துவந்த இந்தப் பள்ளியில் நெல்லை மாநகர மற்றும் சுற்றுப் பகுதியிலுள்ள சுமார் 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவருகின்றனர். பழமையைப் போன்று பள்ளியின் சில பகுதிகளில் புராதன கட்டடங்களும் உள்ளன. இந்தப் பள்ளியில் பயின்ற பல மாணவர்கள் அரசின் உயர் பதவிகளிலும், தனியார் துறையில் உயரதிகாரிகளாகவும் உள்ளனர்.

கடந்த சில நாட்களாகப் பெய்த தொடர் கனமழை காரணமாக சுற்றுச்சுவர் ஈரமாகிப் பொதுமிப்போய் பிடிப்பற்று நின்றிருக்கிறது. இந்நிலையில், நேற்று (17.12.2021) காலை பள்ளி வழக்கம் போல் ஆரம்பித்தவுடன் உடற்பயிற்சி வகுப்பு தொடங்கியிருக்கிறது. அதேசமயம், காலை 10.50 மணி அளவில் பள்ளியில் இடைவேளை விட்ட நேரம். வழக்கம் போல் மாணவர்கள், பள்ளியின் பின்பக்கச் சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள கழிவறைக்கு சிறுநீர் கழிக்கச் சென்றிருக்கிறார்கள். அந்தக் கழிப்பறையும் அதனை ஒட்டிய சுற்றுச்சுவரும் மழை காரணமாக ஈரம் பாய்ந்து பிடிப்பற்று சொதசொதவென நின்றிருக்கிறது. அந்த நேரம் மாணவர்களும் சிறுநீர் கழிக்க உள்ளே சென்றதும் பிடிப்பற்ற கழிவறைச் சுவர்கள் பெயர்ந்து மாணவர்களின் மீது விழுந்து அமுக்கியிருக்கிறது.

அது கண்டு பயந்து ஓலமிட்ட மாணவர்கள் பீதியில் அலறியிருக்கிறார்கள். இடிபாடுகளுக்கிடையே கதறிக்கொண்டிருந்த மாணவர்களை சக மாணவர்கள் அதனை அகற்றியவாறு காப்பாற்ற போராடிக்கொண்டிருந்தனர். இதில் 8 மாணவர்கள் சிக்கியுள்ளனர். இந்நிலையில், தகவல் கிடைத்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினரும் காவல்துறையினரும் இடிபாடுகளுக்கிடையே சிக்கிய மாணவர்களை மீட்டனர். இதில் பழவூரைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு மாணவன் சுதீஷ் மற்றும் தச்சநல்லூரைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவன் விஸ்வரஞ்சன் ஆகிய இரண்டு மாணவர்களும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயமடைந்த மாணவர்களை சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில், நரசிங்கநல்லூரைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவன் அன்பழகனின் உயிர் வழியிலேயே பிரிந்திருக்கிறது.

இந்நிலையில், விபத்து மற்றும் 3 மாணவர்கள் பலியானது குறித்து அறிந்த பள்ளி மாணவர்கள் ஆத்திரத்தில் கொதிப்பானார்கள். அதே சமயம் பள்ளிக்கு விடுமுறை அளிக்க, மொத்தப் பள்ளி மாணவர்களும் ஆக்ரோஷத்தில் திரண்டிருக்கிறார்கள். பின்னர் அவிழ்த்துவிட்ட நெல்லி மூட்டை போன்று மாணவர்களின் கூட்டம் சிதறியது. ஆவேசத்தில் மாணவர்கள் பள்ளியிலுள்ள சில வாகனங்களைச் சேதப்படுத்தினர். பூந்தொட்டிகள் தூக்கி வீசப்பட்டன. தகவலறிந்து மாணவர்களின் பெற்றோர்கள் அலறியடித்துக்கொண்டு பள்ளிக்கு ஒடிவந்தனர். பள்ளியின் சாலையே பதைபதைப்பிலும் பதற்றச் சூழலிலும் இருந்தது. மாணவர்களும் பெற்றோர்களும் பள்ளிச் சாலையின் முன்னே மறியலில் ஈடுபட்டனர்.

அன்பழகன் சதீஷ் விஸ்வரஞ்சன்

மீனவர்கள் குறைதீர் கூட்டத்திலிருந்த மாவட்டக் கலெக்டர் விஷ்ணு, தகவலறிந்து பள்ளிக்கு விரைந்தார். அதே சமயம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணனும் சம்பவ இடத்திற்கு வர, மீட்பு பணிகளை விரைவுபடுத்தியவர்கள் சம்பவ இடத்தை ஆய்வுசெய்தனர். சிகிச்சையிலிருந்த மாணவர்களைச் சந்தித்த கலெக்டர் விஷ்ணு அவர்களுக்கு ஆறுதல் சொன்னார். அங்கிருந்த மாணவர்களிடம் நாம் பேசினோம். அப்போது அவர்கள் கூறியதாவது, “மழையில நனைஞ்ச சுவரு. நாங்க அந்தச் சுவரத் தொட்டாலே அது ஆடும். அதப் பல தடவ பள்ளி ஆசிரியர், தலைமைலயும் சொன்னோம். ஆனா அவுக கவனிச்ச மாதிரி தெரியல. அப்புறம், பள்ளி இடைவேளை நேரத்தில் பி.டி ஆசிரியர் சுவர் பக்கம் நின்னுக்கிட்டு அந்தப் பக்கமா மாணவர்களைப் போகவிடாம வேற பக்கம் போவச் சொல்றது வழக்கமாயிருச்சி.

இன்னக்கி அத மாதிரி பி.டி. ஆசிரியர் நின்னாரான்னு தெரியல. ஆனா இடைவேளைல மாணவங்க கொஞ்சப் பேரு மொத்தமா உள்ள போனப்ப பெயர்த்து விழுந்து அமுக்கிடுச்சி. நாங்கதாம் பதறிப் போயி இடிபாடுகள அகத்துனோம்” என்கிறார்கள் கண்ணீரும் கம்பலையுமாய். இதனிடையே, பள்ளியின் தலைமையாசிரியையான பெர்சிஷ் ஞானசெல்வியை விசாரணைக்காகப் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். சஞ்சய், அபுபக்கர், அப்துல்லா, இசக்கிபிரகாஷ், பிரவீன் உள்ளிட்ட ஐந்து மாணவர்கள் சிகிச்சையில் இருக்கின்றனர்.

தவிர பள்ளியின் சுற்றுச்சுவர் சரியில்லை. குறிப்பாக, கழிவறைப் பக்கம் மோசமாயிருக்கு என்று ஏற்கனவே மாணவன் ஒருவன் பள்ளிக்குப் பெட்டிஷனும் அனுப்பியுள்ளாராம். அதுவும் கண்டுகொள்ளப்படவில்லையாம். 2004இல் கட்டப்பட்ட இந்தப் பள்ளியின் சுற்றுச்சுவர் சரியான முறையான அடித்தளமில்லாமல் கட்டப்பட்டதுதான் விபத்திற்குக் காரணம் என்றும், பள்ளியின் சில கட்டடங்கள் அப்ரூவல் வாங்காமல் கட்டப்பட்டுள்ளது. அவை பள்ளி நிர்வாகம் மற்றும் அரசியல் புள்ளிகளின் செல்வாக்கால் முடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றனர். பள்ளி நிர்வாகத்தின் சர்வ அலட்சியம் மூன்று விலை மதிக்க முடியாத மாணவர்களின் உயிரைக் காவு வாங்கியிருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT