perambalur

பெரம்பலூர் நகர் எளம்பலூர் சாலையில் மேட்டுத் தெருவில் வசித்து வருபவர் வெங்கட்ராமன். 83 வயதான இந்த முதியவர் தனது மனைவி ஜலகத்துடன் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்குப் பிள்ளைகள் கிடையாது. இவர்கள் இருவருக்கும் தலா 1,000 ரூபாய் என அரசு முதியோர் உதவித் தொகையைவழங்கி வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே முதியோர் உதவித்தொகை வழங்க முடியும் எனக் கணவருக்கு வழங்கி வந்த முதியோர் உதவித்தொகையை அரசு நிறுத்திவிட்டது.

Advertisment

இருவருக்கும் சேர்த்து அரசு வழங்கி வந்த 2,000 ரூபாய் உதவித் தொகையை கொண்டே வீட்டு வாடகை உட்பட குடும்பச் செலவுகளைக் கவனித்து வந்த வயதான தம்பதியருக்குப் பெரும் கவலையைத் தந்தது. இதனை அடுத்து வயது முதிர்ந்தாலும் மனம் தளராமல் தனது 83 வயதிலும் வழக்கறிஞர் ஒருவரது அலுவலகத்தில் உதவியாளராகத் தினந்தோறும் 100 ரூபாய் சம்பளத்திற்கு முதியவர் வெங்கட்ராமன் வேலைக்குச் சென்றார். அதன் மூலம் கிடைத்த வருமானம் சற்று ஆறுதலைத் தந்தது.

Advertisment

தற்போது கரோனாவால் ஊரடங்கு அமலில் உள்ள சூழ்நிலையில் அவர் வேலை பார்த்து வந்த அலுவலகமும் பூட்டப்பட்டதால் அதன் மூலம் கிடைத்த வருமானமும் தடைபட்டது. அடுத்த வேளை உணவுக்கே கஷ்டப்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

வேறு எந்த வருமானமும் இல்லாமல் அரசு தரும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை மட்டுமே வைத்துக் கொண்டு குடும்பம் நடத்த முடியாமல் இந்தத் தம்பதியினர் படும் துயரத்தைப் பார்த்து இவர்களது வீட்டுக்கு அருகில் வசிக்கும் அக்கம்பக்கத்தினர் தற்போது இவர்களுக்கு உதவி வருகின்றனர்.

Advertisment

http://onelink.to/nknapp

இந்த வயதான தம்பதியர் வேறு எந்தப் பணியும் செய்யமுடியாத சூழல் உள்ளதால் அரசு நிவாரண உதவிகள் செய்வதுடன், இவர்களுக்கு வழங்கிவந்த முதியோர் உதவித் தொகையையும் மீண்டும் வழங்கினால் மட்டுமே இவர்களது வாழ்க்கையை நகர்த்த முடியும் எனப் பெரம்பலூர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.