
பழனி முருகன் கோவிலில் உள்ள முருகனை தரிசிப்பதற்காக கார்த்திகை மாதம் முதல் பங்குனி உத்திரம் வரை பக்தர்கள் வருகை அதிகளவில் இருக்கும். இதனையொட்டி பழனி அடிவாரம் முழுவதும் ஏராளமானோர் வியாபாரம் செய்யவருவதும் வழக்கம்.
இந்நிலையில், தற்போது சபரிமலை பக்தர்கள் வருகை அதிகரிப்பு காரணமாகத் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வந்துள்ள ஏராளமானோர் பழனியில் தங்கி வியாபாரம் செய்துவருகின்றனர். அந்தவகையில், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இளம்பெண் விஜயசாந்தி குடும்பத்துடன் பழனியில் தங்கி பாசி வியாபாரம் செய்துவருகிறார். இவர் நேற்று (19.12.2021) காலை பழனி மலைக்கோவில் எதிரே உள்ள சுபம் ஹோட்டல் சாலையில் சாலையோரத்தில் அமர்ந்து வியாபாரம் செய்துவந்தபோது, அவர் அமர்ந்திருந்த இடத்தின் அருகே உள்ள வீட்டின் மாடியிலிருந்து பெண் ஒருவர் தண்ணீரை ஊற்றி விரட்டியுள்ளார்.
மேலும், அங்கு அமர்ந்து வியாபாரம் செய்யக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இதை வீடியோ எடுத்த ஒருவர் சமூகவலைதளங்களில் பதிவிட்டதைத் தொடர்ந்து, இந்த வீடியோ வைரலாக பரவிவருகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் விஜயசாந்தி கூறியதாவது, ''அந்த வீட்டின் மாடியிலிருந்து தண்ணீர் ஊற்றிய பெண் அங்கு யாரும் உட்கார்ந்து வியாபாரம் செய்யக் கூடாது என்று தெரிவித்தார். மீறி உட்கார்ந்தால் தண்ணீர் ஊற்றிவிடுவதாகவும் தெரிவித்தார். சாலையில் தங்கி பாசி மற்றும் மாலை வியாபாரம் செய்யும் தங்கள் மீது இப்படி தண்ணீர் ஊற்றித் துரத்துவது எந்த விதத்தில் நியாயம்'' என வருத்தத்துடன் கூறினார்.