/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2426.jpg)
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள வடகுமரையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் வரதராஜ பெருமாள் கோயிலும், காமதீஸ்வரர் கோயிலும் ஒரே இடத்தில் உள்ளன.
இந்தக் கோயில்களில் பட்டியல் சமூகத்தினர் வழிபடுவதற்கும், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுவந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் அந்தக் கிராம மக்களுடன் கடந்த மூன்று மாதங்களாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திவந்தனர். ஆனால், இதுவரை சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. ஒரு தரப்பினர், கோயில்களுக்குப் பூட்டு போட்டனர். கோயில் நிர்வாகத்தை அறநிலையத்துறையிடம் வழங்காமல், தாங்களே நேரடியாக நிர்வாகம் செய்வோம் என்றனர்.
இந்தப் பரபரப்பான நிலையில்நேற்று (15.12.2021), கோயில்களைத் திறக்கும்படி ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா உத்தரவிட்டார். அனைத்து தரப்பு மக்களும் கோயில்களுக்குச் சென்று வழிபடலாம் என்றும் அறிவுறுத்தினார். எனினும், கோட்டாட்சியரின் உத்தரவை ஒரு சமூகத்தினர் ஏற்க மறுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இதனால் கோயில் சுற்றுவட்டார கிராமங்களில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆத்தூர் காவல்துறை டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா முன்னிலையில், அறநிலையத்துறை அதிகாரிகள் புதன்கிழமை (15 டிச.) காலையில் கோயில்களைத் திறக்க முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த 5 பேர், திடீரென்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். சுதாரித்துக்கொண்ட காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பதற்றமான சூழல் உருவானது குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட காவல்துறை எஸ்.பி. ஸ்ரீஅபிநவ், நிகழ்விடத்திற்கு விரைந்து சென்றார்.
எஸ்.பி. உள்ளிட்டகாவல்துறையினர் வடகுமரை கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே, இந்தக் கோயில் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து பிரச்சனை கிளப்பிய இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இச்சம்பவம் வடகுமரை பகுதியில் இரு சமூகத்தினரிடையே தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதால், காவல்துறையினரும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)