Skip to main content

செங்கோல் விவகாரம்: தொடரும் எதிர்ப்புகள் - அறிக்கை வெளியிட்ட திருவாவடுதுறை ஆதீனம்

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

The Scepter Affair; Ongoing protests; Thiruvaduthurai Atheenam issued the report

 

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா கடந்த மே மாதம் 28 ஆம் தேதி நடந்தது. பிரதமர் மோடி இப்புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். இதன் பின் செங்கோல் ஒன்றை கையில் ஏந்தி சென்று சபாநாயகர் இருக்கைக்கு அருகில் நிறுவினார். இதற்கு பல்வேறு தரப்புகளிடம் இருந்தும் எதிர்ப்புகள் வந்தன. 

 

இந்நிலையில் திருவாவடுதுறை ஆதினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “ஜூன் 9ஆம் தேதி இந்து நாளிதழில் மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் செங்கோல் அளிக்கப்பட்டது பற்றித் தெளிவான தகவல் இல்லை என்று திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் கூறியதாகச் செய்தி அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இவ்வறிக்கை வரலாற்றிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டதாகும். உண்மைகளைத் திரித்து விஷமத்தனமாக வெளியிடப்பட்டுள்ளது. காலை பூசைக்குப் பின்னர் எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி இந்து நிருபர் ஆதீனகர்த்தரைச் சந்தித்தார். ஆதினகர்த்தரின் மொழிகள் வரலாற்றுக்குப் புறம்பாகத் திரிக்கப்பட்டுள்ளன.

 

‘1947ஆம் ஆண்டு நிகழ்வுற்ற செங்கோல் வைபவத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தின் பங்களிப்பு குறித்துப் பெருமையடைகிறோம். திருவாவடுதுறையிலிருந்து ஒரு குழு அழைப்பின் பேரில் செங்கோலை எடுத்துக் கொண்டு தில்லி சென்றது. அங்கு செங்கோலானது மவுண்ட்பேட்டனிடம் கொடுக்கப்பட்டது. பின்னர் திரும்பப் பெறப்பட்டு கங்கை நீரால் மந்திரம் ஏற்றப்பட்டது. இதன் பின்னர் பண்டித நேரு அவர்களிடம் வழங்கப்பட்டது’ என்று இச்சம்பவம் குறித்து ஆதீனகர்த்தர் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள்.

 

தம்முடைய விளக்கத்தை மேலும் தெளிவுபடுத்துகையில், 'மவுண்ட்பேட்டனுக்கு செங்கோல் வழங்கப்பெற்றதா என்னும் கேள்விக்கு, செங்கோலானது நேருவுக்கு வழங்கப்பட்டது என்னும் விடை அளிக்கப்பட்டது. ஏனெனில், இதுவே முழுமையான தகவல். செங்கோலானது நிறைவாக, பண்டித நேருவின் கரங்களை அடைந்தது. இதுதான் கூறப்பெற்றது' என்றும் ஆதீனகர்த்தர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். சமீபத்தில் பதிப்பிக்கப்பெற்ற திருவாவடுதுறை ஆதீன வரலாற்றில் செங்கோல் சிறப்பு என்னும் அத்தியாயத்தில் செங்கோலானது மவுண்ட்பேட்டனிடம் கொடுக்கப்பட்டு பின்னர் கங்கை நீர் அபிஷேகத்திற்காக எடுத்துப் போகப்பட்டது என்பது மிக விவரமாகக் குறிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பதிப்பிக்கப்பட்டுள்ள பதிவுகளையே ஆதீனம் இப்போது மீண்டும் நினைவுபடுத்துகிறது.

 

இந்நிகழ்வு தொடர்பாக 1947 ஆகஸ்டில் அப்போதைய ஆதீனகர்த்தர் 20ஆவது மகாசன்னிதானத்தின் அணுக்கத் தொண்டராக (தனிச் செயலர் போல்) இருந்தவரும் இப்போது 96 வயதைத் தொட்டிருப்பவருமான திரு. மாசிலாமணிப் பிள்ளை நிகழ்ந்த சம்பவங்களை மிகக் கோர்வையாகவும் தெளிவாகவும் தெரிவித்துள்ளார்கள். அப்போதைய காலகட்டத்தின், அதாவது 1947ஆம் ஆண்டின் நேரடி சாட்சி, காட்சிப் பிரமாணம் மாசிலாமணிப் பிள்ளை. மவுண்ட்பேட்டனிடம் செங்கோலைக் கொடுத்து வாங்க வேண்டும் என்னும் தங்களின் பணியை ஆதீனக் குழுவினர் செவ்வனே செய்தார்கள் என்பதை மாசிலாமணிப் பிள்ளை நினைவுகூர்கிறார். பின்னர் பண்டித நேருவிடம் செங்கோலை வழங்கியதையும் தெளிவுற உரைக்கிறார். ராஜகோபாலாசார்யார் முனைப்பில் இது செய்யப்பட்டது என்பதையும் நினைவு கூர்கிற மாசிலாமணிப் பிள்ளை, 1947 ஆகஸ்டில் மதராஸ் கலெக்டர் ஆதீனத்திற்கு வருகை புரிந்ததையும் செங்கோல் ஏற்பாடுகளில் பங்கேற்றதையும் தெரிவிக்கிறார். இந்து நாளிதழ் செய்தி அறிக்கைக்கு முன்பாகவே இவற்றையெல்லாம் மாசிலாமணி பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

ஊடகங்களின் ஒரு சாரார் ஆதீனத்திற்குக் குறையேற்படும்படியான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது திருவாவடுதுறை ஆதீனகர்த்தரை மிகவும் புண்படுத்துகிறது. மவுண்ட்பேட்டன் செங்கோலை ஏந்தியிருப்பது போன்ற புகைப்படங்கள் இல்லாமைக்குக் காரணம் ஆதீனக் குழுவினர் புகைப்படக் கருவிகளோடு செல்லவில்லை. செங்கோலை வழங்க வேண்டிய இடத்தில் முறையாக வழங்கி மங்கல நாதமும் திருமுறைத் தமிழும் ஒலிக்க அளித்து தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை முறையாக இக்குழுவினர் செய்து நிறைவேற்றினார்கள். திரும்ப வந்து ஆதீனகர்த்தரிடம் செய்தியைத் தெரிவித்தார்கள். இவையெல்லாம் தொடர்ந்து வந்த காலங்களில் பல இடங்களில் ஊடகங்கள் உட்பட பதிவு செய்யப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்