SC, ST to file a case against Seeman. Commission order

அண்மையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் தலைமைஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, கலைஞரை விமர்சிப்பதற்காகச் 'சண்டாளன்' என்று வேறு ஒரு சமூக பெயரைச் சீமான் பயன்படுத்தியது சம்பந்தப்பட்ட சமூகத்தினரை இழிவுப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதியில் இருந்து சீமான் மீது புகார் கொடுக்கப்பட்டது.

அந்த வகையில் இது தொடர்பாக ஆவடி பட்டாபிராம் காவல் நிலையத்தில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி அஜேஷ் என்பவர் புகார் அளித்திருந்தார். ஆனால் புகாரின் பேரில் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அதிருப்தியடைந்த அஜேஷ் தேசிய எஸ்.சி., எஸ்.டி.ஆணையத்திடம் சீமான் குறித்து புகார் அளித்துள்ளார். அதன்பேரில், விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காகசீமான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையருக்கு எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதே வார்த்தையை பயன்படுத்தியதற்காக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.