Advertisment

செருப்பு வீசிய விவகாரம்; வழக்கறிஞர் மீது வழக்கு பதிவுசெய்ய மறுத்த உச்சநீதிமன்றம்!

Untitled-1

உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக இருக்கும் பி.ஆர். கவாய், தேர்தல் நிதிப் பத்திரம், புல்டோசர் கொண்டு வீடுகள் இடிப்பு, பட்டியல் சமூகத்திற்கான உள் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில் முக்கியத் தீர்ப்புகளை வழங்கியுள்ளார். கடந்த மே மாதம் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுக் கொண்ட பி.ஆர். கவாய், உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை விசாரித்து வருகிறார்.

Advertisment

அதன்படி, அக்டோபர் 6 ஆம் தேதி சனாதனத்தை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் கருத்துகளைத் தடுப்பது தொடர்பான வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. அப்போது அமர்வு மேடையை நோக்கி வந்த ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர், “சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது” என்று கூச்சலிட்டபடி காலணியைத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வீச முயன்றார். இதைக் கண்டு நீதிமன்றத்தில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் சரியான நேரத்தில் வழக்கறிஞரைத் தடுத்து நிறுத்தி அவரை வெளியே அழைத்துச் சென்றனர். அப்போதும் அதே கோஷத்தைத் தொடர்ந்து முழங்கியபடி சென்றுள்ளார்.

Advertisment

அப்போது நீதிமன்றத்துக்குள் குழப்பமான சூழல் நிலவிய போதிலும், தலைமை நீதிபதி கவாய் மிகவும் அமைதியுடனும் நிதானத்துடனும் தனது அடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். மேலும் ஒரு வழக்கறிஞரிடம் அடுத்த வழக்கு குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு கூறியதுடன், “கவனம் சிதற வேண்டாம். இந்த நிகழ்வால் நான் திசைதிருப்பப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். தலைமை நீதிபதியின் கண்ணியமான பதில் நீதிமன்ற அறையில் இருந்தவர்களிடமிருந்து பாராட்டைப் பெற்றாலும், இந்திய உச்ச நீதிமன்றத்துக்குள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கேள்விகளை எழுப்பியது. நாட்டின் பல பகுதிகளில் இதனைக் கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் வழக்கறிஞராகப் பணியாற்ற இந்திய பார் கவுன்சில் தடை விதித்து உத்தரவிட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய ராகேஷ் கிஷோர், “செப்டம்பர் 16 அன்று தலைமை நீதிபதியின் அமர்வில் கஜுராஹோவில் உள்ள ஜவாரி கோயிலில் உள்ள விஷ்ணுவின் சிலையை மீட்டெடுக்கக் கோரிய பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதி கவாய், ‘சிலையை மீட்டெடுக்க கடவுளிடம் சென்று பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று கேலி செய்து மனுவைத் தள்ளுபடி செய்தார். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு என்னைக் காயப்படுத்தியது. நான் செய்தது அவரது செயலுக்கான எனது எதிர்வினை. நான் அதற்காகப் பயப்படவில்லை, எனக்கு எந்த வருத்தமும் இல்லை. கடவுள் சொல்லித்தான் அவரைத் தாக்க முயன்றேன். நான் அதற்காக மன்னிப்பு கேட்கமாட்டேன்” என்றார். ராகேஷ் கிஷோரின் இந்தக் கருத்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தலைமை நீதிபதி கவாய் மீது காலணியை வீசிய வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, “ஏற்கனவே தலைமை நீதிபதி காலணி வீசிய ராகேஷ் கிஷோரை மன்னித்துவிடுங்கள் என்று கூறிவிட்டார். அதனால் மேல் நடவடிக்கை எடுக்க விருப்பமில்லை என்று கருதுகிறோம்” என்று தெரிவித்தது. மேலும், இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு “die its own natural death” என்று கூறி, ‘இது தானாக இறந்து போகட்டும்’ என்று நீதிபதி சூர்ய காந்த் அமர்வு வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய மறுத்துவிட்டது.

இருப்பினும், தலைமை நீதிபதி கவாயின் பெருந்தன்மை அவர் மன்னித்துவிட்டார். ஆனால், இது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா? உச்ச நீதிமன்றத்தில் நடந்த இந்த அத்துமீறல் நீதித்துறையின் மாண்பை குலைக்காதா? ஒருவேளை வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் என்ன செய்வது? யார் பொறுப்பேற்பது? அதனால் உடனடியாக வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Justice BR Gavai suprem court
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe