ADVERTISEMENT

பண்ணை வீட்டிற்குச் செல்கிறது எஸ்.பி.பியின் உடல்... இனி பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதியில்லை!

07:57 PM Sep 25, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (25/09/2020) மதியம் 01.04 மணிக்கு எஸ்.பி.பி உயிரிழந்தார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவால் திரையுலகினரும், ரசிகர்களும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடல், நாளை (26/09/2020) அடக்கம் செய்யப்படும் என்று எஸ்.பி.பி.யின் குடும்பத்தினர் தெரிவித்துள்ள நிலையில், அவரது உடல் தற்பொழுது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள், பொதுமக்கள் அதிகம் கூடுவதால் அந்தப் பகுதியில் கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


அவரது உடலுக்குப் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த திரண்டு வருவதால் உடலை பண்ணை வீட்டிற்குக் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர். செங்குன்றம் தாமரைப் பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடல் நாளை நல்லடக்கம் செய்யப்பட இருக்கும் நிலையில், தற்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ரசிகர்கள் தொடர்ச்சியாக அதிகமாக வருகை தருவதால் கரோனா காரணமாக பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


அவரது உடல் பண்ணை வீட்டிற்கு எடுத்துச் சென்றபின் அங்கு அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்ணை வீட்டில் நான்கு டி.எஸ்.பிக்கள் தலைமையில் 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கரோனா காரணமாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை என திருவள்ளூர் எஸ்.பி அரவிந்தன் தெரிவித்துள்ளார். மேலும், 2 கிலோ மீட்டருக்கு முன்னதாகவே வாகன தணிக்கை செய்யப்படும் எனவும் எஸ்.பி.அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT