Skip to main content

கல்விக்கடன் காப்பீட்டுத் தொகையில் மோசடி; எஸ்.பி.ஐ உதவி மேலாளர் கைது

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

SBI assistant manager arrested for fraud in education loan insurance amount

 

கல்விக்கடன்  காப்பீட்டுத் தொகை ரூபாய் 34.10 லட்சத்தை வங்கிக்கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்த எஸ்.பி.ஐ உதவி மேலாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

வேலூர் மாநகர் காட்பாடி காந்தி நகரில் செயல்பட்டு வருகிறது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் காந்தி நகர் கிளை. இந்த வங்கியில் கல்விக்கடன் பிரிவில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தவர் விருதுநகரைச் சேர்ந்த யோகேஸ்வர பாண்டியன் (38). இவர் வாடிக்கையாளர்கள் செலுத்தும் கல்விக்கடன் காப்பீட்டுத் தொகையை முறையாக வங்கிக்கணக்கில் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.

 

வாடிக்கையாளர் ஒருவர் காப்பீட்டுத் தொகையை செலுத்தியும் கணக்கில் சேராமல் உள்ளதாக வங்கி மேலாளர் சிவக்குமாரிடம் கூறியுள்ளார். அதனையடுத்து, வங்கி அதிகாரிகள் நடத்திய விசாரணையில், உதவி மேலாளர் யோகேஸ்வர பாண்டியன் 137 நபர்கள் செலுத்திய கல்விக்கடன் காப்பீட்டுத் தொகையான 34,10,622 ரூபாயை வங்கிக்கணக்கில் செலுத்தாமல் போலியான கணக்கு காண்பித்து தன்னுடைய இரு வங்கிக்கணக்குகளில் செலுத்தியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, யோகஸ்வர பாண்டியனை சஸ்பெண்ட் செய்துள்ளது வங்கி நிர்வாகம்.

 

இந்த மோசடி குறித்து எஸ்பிஐ வங்கியின் முதன்மை மேலாளர் சிவகுமார் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் யோகேஸ்வர பாண்டியன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மோசடி செய்த மொத்தப் பணத்தையும் யோகேஸ்வர பாண்டியன் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் இழந்தது தெரியவந்துள்ளது. அதனையடுத்து யோகஸ்வர பாண்டியனை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.